முக்கியமான ஃபைல் இருக்கிறது - திமுக எம்.எல்.ஏ-வை மிரட்டிய துணை நடிகர் சிக்கிய திகில் கதை  | Actor threatened DMK MLA

வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (01/05/2018)

கடைசி தொடர்பு:16:27 (01/05/2018)

முக்கியமான ஃபைல் இருக்கிறது - திமுக எம்.எல்.ஏ-வை மிரட்டிய துணை நடிகர் சிக்கிய திகில் கதை 

 எம்.எல்.ஏ. இ.கருணாநிதி

சென்னையில் தி.மு.க எம்.எல்.ஏ-விடம் பணம் கேட்டு மிரட்டிய துணை நடிகர் வரதராஜனை போலீஸார் சினிமாவைப்போல விரட்டிச் சென்றனர். போலீஸார் துரத்துவதை அறிந்ததும் தலைமறைவான துணை நடிகரை இன்று அதிகாலை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். 

 பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ இ.கருணாநிதி, தி.மு.க-வின் பல்லாவரம் நகரச் செயலாளரான இவருக்கு நேற்றிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், 'நான் விஜிலென்ஸ் அதிகாரி. என்னிடம் உங்கள் தொடர்பான முக்கிய ஃபைல் உள்ளது. அதன் அடிப்படையில் உங்கள் வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதுதொடர்பாக உங்களிடம் நேரில் பேச வேண்டும். இதனால் உடனே நீங்கள் குரோம்பேட்டையில் உள்ள உணவகத்துக்கு வர வேண்டும்' என்று கூறியிருக்கிறார். அதற்கு கருணாநிதி, 'தன்னுடைய வீட்டுக்கு வரும்படி தெரிவித்துள்ளார்'. அதற்கு போனில் பேசியவர், 'என்னை போலீஸார் கண்காணித்துவருகின்றனர். அதனால் நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் சிக்கல். எனவே, உணவகத்துக்கு வாருங்கள்' என்று கூறினார். 

இதையடுத்து கருணாநிதி எம்.எல்.ஏ மற்றும் சிலர் காரில் அந்த உணவகத்துக்குச் சென்றனர். அப்போது, எம்.எல்.ஏ-வைச் சந்தித்த நபர், தன்னுடைய பெயரை வரதராஜன் என்றும் விஜிலென்ஸ் அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கு அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். தொடர்ந்து, 'உங்கள் தொடர்புடைய ஃபைல் என்னிடம் உள்ளது. அந்த பைலை உங்களிடம் ஒப்படைக்க 15 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என்று பேரம் பேசியுள்ளார். 

அதற்கு எம்.எல்.ஏ, 'நீங்கள் கேட்கும் பணம் என்னிடம் இல்லை. நானே வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன்' என்று கூறியுள்ளார். உடனே வரதராஜன், அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். பிறகு, மீண்டும் எம்.எல்.ஏ-வை தொடர்புகொண்டு கீழ்க்கட்டளை சிக்னல் அருகே வரும்படி தெரிவித்தார். உடனே எம்.எல்.ஏ. காரில் அங்கு சென்றார். அப்போது, தனிநபராக வரதராஜன் மோட்டார் சைக்கிளில் வந்தது எம்.எல்.ஏ தரப்பினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கருணாநிதி எம்.எல்.ஏ போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை செல்போனில் தொடர்புகொண்டு முழு விவரத்தைத் தெரிவித்தார். இதனால் போலீஸ் டீம் சுதாரித்தது. உடனடியாக எம்.எல்.ஏ-வை தொடர்புகொண்ட போலீஸ் அதிகாரிகள், அவரிடம் வரதராஜனின் செல்நம்பரை வாங்கி அவரது இருப்பிடத்தை தேடினர். போலீஸாரிடம் விவரத்தைக் கருணாநிதி எம்.எல்.ஏ போனில் தெரிவித்த சமயத்தில் வரதராஜன் அங்கு வந்தார். அப்போது தகவல் போலீஸுக்குத் தெரிந்ததால் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு வரதராஜன் பைக்கில் பறந்துவிட்டார். இந்தத் தகவல் போலீஸுக்குத் தெரிந்ததும் வரதராஜனை போலீஸார் விரட்டினர். எம்.எல்.ஏ-வின் கார் டிரைவரை இறக்கிவிட்ட போலீஸார், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் டிரைவராக மாறினார்.

 இந்தச் சமயத்தில் எம்.எல்.ஏ-வின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் நாளை சந்திப்போம். அந்த இடம் குறித்து தகவல் அனுப்புகிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த போலீஸார், எம்.எல்.ஏ-வை வீட்டுக்குச் செல்லும்படி கூறிவிட்டு வரதராஜனைத் தேடினர். அவரது செல்போன் சிக்னல் திருவொற்றியூரைக் காட்டியது. உடனடியாகப் போலீஸ் டீம் அங்கு சென்று வரதராஜனைப் பிடித்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் வரதராஜன், சினிமாவில் துணை நடிகராவும் சீரியலில் நடித்துவருவதும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. 

இதுகுறித்து கருணாநிதி எம்.எல்.ஏ-வின் வழக்கறிஞர் ராஜாராம் கூறுகையில், "எம்.எல்.ஏ-வுக்கு போன் வந்ததும் நாங்கள் உஷாராகிவிட்டோம். போனில் மிரட்டியவரை கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டோம். போலீஸாருக்கும் எங்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். எம்.எல்.ஏ-வுக்கு போனில் பேசியவரின் செல்போன் நம்பரை ட்ரு காலர் மூலம் ஆய்வு செய்தபோது டிரைவர் குட்டி என்று தெரியவந்தது. இதனால் எங்களின் சந்தேகம் வலுத்தது. 15 லட்சம் ரூபாய் கேட்ட அவர், கடைசியாக 6 லட்சம் ரூபாய் என்று பேரம் பேசினார். எம்.எல்.ஏ குறித்த முக்கிய ஃபைல் இருப்பதாகச் சொல்லி மிரட்டியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் யார், அவரை இயக்கியது யார் என்பதைப் போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார். 

கருணாநிதி எம்.எல்.ஏ-விடம் பேசினோம். "நான் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவேன். மக்கள் நலனில் அக்கறை செலுத்தி தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவருகிறேன். இந்தச் சமயத்தில்தான் வரதராஜன் என்று ஒருவர் போனில் பணம் கேட்டு மிரட்டினார். வாடகை வீட்டில் வசித்துவரும் என்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறினேன். போலீஸாரின் துரித நடவடிக்கையால் வரதராஜனை போலீஸார் கைதுசெய்துள்ளனர்" என்றார். 

இதுகுறித்து குரோம்பேட்டை போலீஸார் கூறுகையில், "திருவொற்றியூரைச் சேர்ந்த வரதராஜன், சூதாட்டத்தில் பணத்தை இழந்து வறுமையில் வாடியுள்ளார். இதனால் பணம் பறிக்க அவர் திட்டமிட்டபோதுதான் கருணாநிதி எம்.எல்.ஏ குறித்த தகவல் அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி என மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். அதற்காக போலியாக ஐ.டி கார்டையும் தயாரித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரித்துவருகிறோம்" என்றனர்.