'இந்தச் சாமியை நீ கும்பிடக் கூடாது' - கோயிலிலிருந்து பெண் விரட்டியடிக்கப்பட்ட கொடூரம் | Women didnt allowed to enter temple

வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (01/05/2018)

கடைசி தொடர்பு:16:37 (01/05/2018)

'இந்தச் சாமியை நீ கும்பிடக் கூடாது' - கோயிலிலிருந்து பெண் விரட்டியடிக்கப்பட்ட கொடூரம்

இளம்பெண் ராதா

“இந்தச் சாமியை நீ கும்பிடக் கூடாது” என்று கோயிலிலிருந்து இளம்பெண் ஒருவர் விரட்டியடிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியிருக்கிறது.

எத்தனை பெரியார், எத்தனை அம்பேத்கர் வந்தாலும் இந்தச் சமூகத்தை சாதிப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது என்பது மீண்டும் உணர்த்தப்பட்டிருக்கிறது இந்தச் சம்பவம். கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற இளம்பெண்ணை, ''இங்கெல்லாம் நீ வரக் கூடாது. வெளியே செல்” என்று விரட்டியடிக்கப்படும் அதிர்ச்சி வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் கீழ் வருகிறது கூனிச்சம்பட்டு கிராமம். அதே கிராமத்தின் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ராதா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த ஊரில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றிருக்கிறார். அப்போது ராதா பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அந்தக் கோயிலுக்குள் அவர் வரக்கூடாது என்று சொல்லி விரட்டுவதோடு, அவரை சாதிப் பெயரைச் சொல்லியும் திட்டுகிறார்கள். அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், அங்கிருந்து செல்ல மறுக்கும் இளம்பெண் ராதா, “நான் இந்தக் கோயிலுக்கு வரக் கூடாது, இங்கு இருக்கக் கூடாது என்று அந்தச் சாமி வந்து சொல்லட்டும்” என்கிறார். ஆனால், “இங்கெல்லாம் நீ வரக் கூடாது. உங்கள் கோயிலுக்கு நாங்கள் வருகிறோமா? உங்கள் கோயிலுக்குப் போயி சாமி கும்பிடு போ” என்று விரட்டும் அவர்களிடம், ''கோயிலில் உங்கள் கோயில், எங்கள் கோயில் என்று பாகப் பிரிவினை கிடையாது. சாமியை எங்கு வேண்டுமானாலும் கும்பிடலாம்” என்று தொடர்ந்து வாதிடுகிறார் ராதா. ஆனால், அவர் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாத அந்தப் 'பெரிய மனிதர்கள்’ அந்தப் பெண்ணை மிரட்டி, அடிக்கவும் பாய்கிறார்கள். சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ சமூக ஆர்வலர்களையும் பொதுமக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


“வீடியோவில் வரும் அந்தப் பெண் ராதா மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவரும்கூட. அன்றைய தினம் அந்தக் கோயிலில் திரௌபதி அம்மனுக்கு விசேஷ பூஜை நடந்துகொண்டிருக்கிறது. அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த ராதா பூஜை நடந்துகொண்டிருக்கிறதே அம்மனை தரிசிக்கலாம் என்று கோயிலுக்குள் சென்றிருக்கிறார். அப்போதுதான் அந்தக் கோயில் தர்மகர்த்தா உள்ளிட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராதாவை மிரட்டி வெளியேற்றினார்கள். இந்தச் சம்பவத்தை அங்கிருந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து, தங்கள் சமூகத்தவர்கள் மட்டும் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டிருக்கிறார். ஆனால் அந்தக் குழுவில் இருந்த மனித நேயம் மிக்க ஒருவரே இதை வெளியிட்டிருக்கிறார். பிரச்னை பெரிதானதும் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி சம்பவத்தை மறைக்கும் வேலையில் இறங்கிவிட்டனர்” என்கின்றனர் அந்தப் பகுதி இளைஞர்கள்.

”ராதாவை விரட்டியடிக்கும் கும்பலில் உள்ள இருவர் புதுச்சேரி அரசு ஊழியர்கள். அதனால், அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க