வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (01/05/2018)

கடைசி தொடர்பு:23:00 (01/05/2018)

'தமிழகத்துக்குள் பா.ஜ.க நுழையவே முடியாது!’ - அன்வார்ராஜா எம்.பி

 கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்று விட்டால் தமிழகத்திற்குள் நுழைந்து விடலாம் என பா.ஜ.க.நினைப்பது தவறு. தமிழகத்திற்குள் பா.ஜ.க.நுழையவே முடியாது என அன்வர்ராஜா எம்.பி.பேட்டி.

'கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்றுவிட்டால் தமிழகத்துக்குள் நுழைந்துவிடலாம் எனப் பா.ஜ.க.நினைப்பது தவறு. தமிழகத்துக்குள் பா.ஜ.க நுழையவே முடியாது’ என அன்வர்ராஜா எம்.பி கூறினார்.

வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா

வக்பு வாரியத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மக்களவை உறுப்பினரான அன்வர் ராஜாவை, அவரது இல்லத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், முஸ்லிம் பிரமுகர்கள் உட்பட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்வர்ராஜா, ''வக்பு வாரியத்தின் தலைவர் பதவி கடந்த 2014-ம் ஆண்டு முதல் காலியாகவே இருந்து வந்தது. இப்பதவிக்கு தற்போது ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். வக்பு வாரியத்தின் சொத்துகள் பல கோடிக்கணக்கில் இருந்தாலும், அவைகளில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு இருக்கின்றன. அவை அனைத்தையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் அண்மையில் ரூ.20,000 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

பள்ளிவாசல்களில் பெரும்பாலானவையும் வக்பு வாரியத்தில் இணைக்கப்படாமல் தனித்தனியாக இயங்குவதையும், ஆய்வு செய்து அவற்றையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல எந்தெந்த பள்ளி வாசல்கள் வக்பு வாரியத்தில் உள்ளன எனவும் கணக்கெடுத்து வருகிறோம். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு வாரியச் சொத்துகளை முதலில் கணக்கெடுத்து, பின்னர் அவற்றை வக்பு வாரியத்துடன் இணைக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இந்தியாவிலேயே வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் மதுரையில் மட்டும் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. விரைவில் அங்கு பாலிடெக்னிக்கும் ஆடிட்டோரியமும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் விரைவில் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.வக்பு வாரியத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பவும் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மாவட்டம்தோறும் மீட்கும் வகையில் மாவட்ட அளவில் குழுக்களும் அமைக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மக்களவையை முடக்கியதற்கும் பா.ஜ.க-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.தமிழக மக்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு நாங்கள் செயல்பட்டோம். கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்றுவிட்டால் தமிழகத்துக்குள் நுழைந்துவிடலாம் எனப் பா.ஜ.க நினைப்பது தவறு. தமிழகத்துக்குள் பா.ஜ.க நுழையவே முடியாது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டி வரி விதிப்பும் பொதுமக்களை வெகுவாகப் பாதித்துவிட்டதால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தனித்துப் போட்டியிடும். கூட்டணி சேர்ந்து போட்டியிட்டாலும் கண்டிப்பாக பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர மாட்டோம். பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ளவர்கள் மட்டுமே டி.டி.வி.தினகரன் அணியில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் அ.தி.மு.க-வுக்கு விரைவில் திரும்புவார்கள்'' என்றார்.