வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (01/05/2018)

கடைசி தொடர்பு:21:47 (01/05/2018)

'தி.மு.க., காங்கிரஸைப் போல் அ.தி.மு.கவும் எங்களுக்கு எதிரிதான்’ - தமிழிசை

காங்கிரஸ், தி.மு.கவைப்போல அ.தி.மு.கவும் எங்களுக்கு எதிரிதான் என்று பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் விகடன் டாட் காமுக்கு அளித்த சிறப்பு பேட்டி

தமிழைசை

வரும் தேர்தலில் யாருடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும்? 

''வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும். அதே நேரத்தில் தனித்து போட்டியிடுவது குறித்தும், தற்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால், தனித்தன்மையுடன் போட்டியிடுவோம். பிரதமர் மோடி தலைமையில் சிறப்பான, ஊழற்ற ஆட்சி நடந்துவருகிறது''. 

பா.ஜ.க. தலைமையில் கடந்த 2014-ல் தமிழகத்தில் அமைந்த கூட்டணி தொடராததற்கு என்ன காரணம்? 

''2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாக புதிய கூட்டணியை அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோம். முழுமையாக வெற்றி பெறவில்லை என்றாலும் 19 சதவிகித வாக்குகளைப் பெற முடிந்தது. 

இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டம், சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகள் என அனைத்திலும் கூட்டணி தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அந்தக் கூட்டணி தொடரவில்லை. இந்தக் கூட்டணி தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். அந்தக் கூட்டணியில் உள்ள தலைவர்களில் விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களை முதல்வராக முன்னிறுத்தியதால், கூட்டணி தொடரவில்லை. அதன்பிறகு மக்கள் நலக்கூட்டணியாக மாறியது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறும்''. 

தி.மு.கவை விமர்சிக்கும் பா.ஜ.க, அ.தி.மு.கவை ஏன் விமர்சிப்பதில்லை? 

''தமிழகத்தில் அ.தி.மு.கவை, பா.ஜ.க விமர்சிக்கவில்லை என்று கூறுவது தவறு. தி.மு.கவைப் போலத்தான் அ.தி.மு.கவையும் நாங்கள் விமர்சித்து வருகிறோம். குட்கா வழக்கில் கூட தண்டனை வழங்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தி உள்ளோம். அ.தி.மு.கவுக்கு பின்னால் பா.ஜ.க இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுவது தவறு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் அதை விமர்சிக்கிறோம். ஆனால், ஸ்டாலின் உள்நோக்கத்துடன் பா.ஜ.கவை விமர்சித்து வருகிறார்.

அ.தி.மு.கவும் எங்களுக்கு எதிரிதான். எங்களுடைய பிரதான எதிரி காங்கிரஸ், தி.மு.கதான். கர்நாடகா ,தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுப்பதைக் குறித்து திருநாவுக்கரசரிடம், ஸ்டாலின் கேட்பதில்லை. ஏனென்றால் அது கூட்டணி. தமிழுக்கு உரிய முக்கியத்துவத்தை பா.ஜ.க அரசு கொடுத்து வருகிறது. தமிழகம் வளர்ச்சி அடைய பா.ஜ.கவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க ஒரு புதிய கட்சி'' என்றார்.