கணவனுடன் தகராறு! - குழந்தைகளுடன் ரயில்முன் பாய்ந்து மனைவி தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகறாரில் வாங்கி வைத்த இட்லியை கூட தன் குழந்தைகளுக்கு கொடுக்காமல் தாய் ஒருவர் தானும் சேர்ந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு நிலவியது.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தன் இரண்டு குழந்தைகளோடு ரயில் முன்பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

தஞ்சாவுர் கபிஸ்தலம் அருகே உள்ள இளங்கார்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலாவதி. இவரது கணவர் ராஜேஷ்குமார். இவர்களுக்கு ஹரிஹரன் என்ற 10 வயது ஆண் குழந்தையும், நிரஞ்சனா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளன. ராஜேஷ்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தன் மனைவியிடம் ஒழுங்காக சம்பளப் பணத்தை கொடுப்பதில்லை. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் இரு குழந்தைகளை வைத்து கொண்டு கலாவதி கஷ்டபட்டிருக்கிறார். இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இன்றும் (1.5.2018) இதுதொடர்பாக கலாவதிக்கும் ராஜேஷ்குமாருக்கும் சண்டை ஏற்படவே, தன் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்த கலாவதி, பாபநாசம்–பண்டாரவாடை ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே அரையபுரம் ரயில்வே கேட் பகுதியில்  மயிலாடுதுறையிலிருந்து– திருநெல்வேலி நோக்கி சென்ற பாஸ்ட் பாசஞ்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சியான ரயில் ஓட்டுநர் அருகே இருந்த பண்டாரவாடை ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பிறகு பண்டாரவாடை ரயில்வே ஸ்டேஷன் பணியாளர்கள் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கும், பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் தகவல் அளித்தனர்.

இதற்கிடையில் அரையபுரம் ரயில்வே கேட் அருகே பெண் ஒருவர் குழந்தைகளுடன்  ரயில் முன் பாய்ந்த தகவல் அப்பகுதியில் பரவியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு  வந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  பெண் குழந்தையான நிரஞ்சனாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்  நிரஞ்சனா தஞ்சாவூர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் கும்பகோணத்திலிருந்து ரயில்வே புறக்காவல் நிலைய போலீசார் வந்ததும், தற்கொலை செய்து கொண்ட கலாவதி, ஹரிஹரன் உடலை மீட்டு விசாரணை  நடத்தினர். அதில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முன் தன் குழந்தைகளோடு சேர்ந்து சாப்பிடுவதற்காக மூன்று இட்லி பொட்டலங்களை பார்சல் வாங்கி வந்துள்ளார். ஆனால் அந்த இட்லியை தானும் சாப்பிடாமல் தன் குழந்தைகளுக்கும் கொடுக்காமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த இட்லி பொட்டலங்கள் அப்படியே இருந்ததாக ரயிலே போலீசார் தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!