கோஷ்டி மோதலால் இருவர் படுகொலை - பட்டுக்கோட்டை அருகே பரபரப்பு!

பட்டுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதலில் இருவர் படுகொலை செய்யபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை அருகே சுடுகாடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை கோவில் திருவிழாவில் பெரும் மோதலாக வெடிக்க அதில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர் . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருவதோடு பாதுகாப்பிற்கு காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மஞ்சள்வயல் கிராமத்தில் அறநிலையத்துறைக்கு  சொந்தமான பாலசுப்ரமணியர் கோவில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது. கோவிலின் எதிரேயே சுடுகாடும் உள்ளது. இதை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் எனப்  பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியினர் சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்றி அமைந்தனர். அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்தச்  சுடுகாட்டிற்கு வேலி அமைத்து, சுடுகாடு எங்களுக்குத்  தான் சொந்தம் எனப்  தெரிவித்துள்ளனர். இதனால் மற்ற சமூகத்தினருக்கும், அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டன. இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பிற்கும் சமாதானம்  செய்து வைத்தனர். இச்சம்பவத்தால் இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் பாலசுப்பரமணியர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 27-ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிழ்வான காவடி எடுப்பு நிகழ்ச்சி நேற்று  இரவும், தேரோட்டம் இன்று அதிகாலையும் நடைபெற இருந்தன. இதில் கலந்துகொள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். வழக்கம் போல நேற்று இரவு காவடி எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சுமார் 11 மணிக்குப்  பயங்கர அலறல் சத்தம் அப்பகுதியில் கேட்டுள்ளது. இதில் பக்தர்கள் நாலா புறமும் சிதறி ஓடினார். அப்போது அரிவாள், கத்தி, சோடா பாட்டிலுடன் வந்த மர்ம நபர்கள் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது கொலை வெறியுடன்  தாக்கியுள்ளனர். 

இதில் அரிவாளால் வெட்டுப்பட்ட மஞ்சள்வயலை சேர்ந்த சிவனேசன், பிரதீப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மோதலில் பலர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மோதலால் முருகன் கோவில் வளாகமே போர்க்களம் போல் காணப்பட்டது. செருப்புகள், சேர்கள் சிதறிக்  கிடந்தன.

சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் இன்று அதிகாலை நடக்கவிருந்த தேரோட்டத்தையும்  காவல்துறையினர் பாதுகாப்போடு நடத்தினர் அந்தக் கிராமத்தினர். மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் அந்த ஊர் முழுவதும் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!