அரசுக்கு எதிராகப் பேச்சு - வைகோ மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீஸ்!

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களை வன்முறைக்குத் தூண்டும் வகையிலும் மற்றும் அரசுக்கு எதிராகவும் பேசியதாக வைகோ மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த 24-ம் தேதி முதல் 4 நாள் வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடி குறித்து வைகோ, அவதூறாகப் பேசியதாக, பி.ஜே.பி-யினர் குற்றம்சாட்டி வைகோவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டினர். இதில் குளத்தூரில் வைகோ மீது பாட்டில் வீச்சும், உடன்குடியில் கல்வீச்சுத் தாக்குதலும் நடந்தப்பட்டது. இதில் ம.தி.மு.க-வினரும் பி.ஜே.பி.யினரும் மோதலில் ஈடுபட்ட சம்பவமும் நடைபெற்றது.

வாகனப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் கடந்த 28-ம் தேதி சனிக்கிழமை மாலை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி வைகோ தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்கள் குறித்தும் மற்றும் மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தும் பேசினார் வைகோ.

இந்நிலையில், இந்தக்கூட்டத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்திலும், பொதுமக்களை வன்முறைக்குத் தூண்டும் விதமாகப் பேசியது மற்றும் அரசுக்கு எதிராகவும் பேசியதாக பெண் உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ மீது 505 (1 )(பி), 7 (1 ) (ஏ ) ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!