ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக திரளும் ஹெச்.ராஜா ஆதரவாளர்கள்!

ஆடிட்டர் குருமூர்த்தியை  ஹெச்.ராஜா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்

ஆடிட்டர் குருமூர்த்தியை ஹெச்.ராஜா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஒரே மாதிரி சிந்தனை கொண்ட குருமூர்த்திக்கும் ஹெச்.ராஜாவுக்கும் அப்படி என்ன பிரச்சனை என்று விசாரித்தபோது, ஹெச்.ராஜாவை கடுமையாக விமர்சித்து துக்ளக்கில் வந்த கட்டுரைதான் காரணம் என்றார்கள். 

ஆடிட்டர் குருமூர்த்தி

சோ மறைவுக்குப் பிறகு துக்ளக் இதழை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் தேசிய இணை அமைப்பாளராகப் பதவி வகிக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களைக் கூறுவது வழக்கம் தான். இந்த நிலையில் இன்று வெளியான துக்ளக் இதழில்  ''பா.ஜ.க.வை பிடித்த சனி'' என்ற தலைப்பில் எழுத்தாளர் சந்திரன் என்பவரின் கட்டுரை வந்துள்ளது. அந்தக் கட்டுரையில் சமீபத்தில் கனிமொழியைப் பற்றிய ஹச்.ராஜாவின் கருத்து பற்றியும், பெண் செய்தியாளர்களை பற்றி எஸ்.வி.சேகரின் கருத்து பற்றியும் கடுமையாகச் சாடி எழுதப்பட்டிருந்தது. 

பா.ஜ.க-வுக்கு தமிழகத்திலிருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரையும் ஹச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் கெடுத்து விடுவார்கள் என்று கட்டுரை முடிக்கப்பட்டிருந்தது. ஹச்ராஜாவுக்கு எதிராக இப்படி ஒரு கட்டுரை துக்ளக்கில் வரும் என்று அவருடைய ஆதரவாளர்கள் நினைக்கவில்லை. சந்திரன் எழுதியிருந்தாலும், குருமூர்த்தி அனுமதியில்லாமல் பிரசுரமாகி இருக்காது என்பதால், ஹச்.ராஜா ஆதரவாளர்கள் ஆடிட்டர் குருமூர்த்தியை முகநூலில் கடுமையாக விமர்சித்து எழுதி வருகிறார்கள். இது பா.ஜ.க-வுக்குள் புதுச்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது எதுவரை போகும் என்று தெரியவில்லை. இதைப்பற்றி ஹச்.ராஜா எந்தக் கருத்தும் இதுவரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!