'கொள்ளையடித்து ருசிகண்டவர்கள் ஆளும் வரை வருவாய் உயராது' - ராமதாஸ் கண்டனம்! | Dr ramadoss statement regarding tamilnadu revenue

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (02/05/2018)

கடைசி தொடர்பு:09:02 (02/05/2018)

'கொள்ளையடித்து ருசிகண்டவர்கள் ஆளும் வரை வருவாய் உயராது' - ராமதாஸ் கண்டனம்!

'அரசுத்துறையில் காணப்படும் ஊழல்களை ஒழித்தால் தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாயை இப்போது இருப்பதை விட இரு மடங்காக உயர்த்த முடியும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

'அரசுத் துறையில் காணப்படும் ஊழல்களை ஒழித்தால், தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாயை இப்போது இருப்பதைவிட இரு மடங்காக, அதாவது ரூ.1.76 லட்சம் கோடியிலிருந்து மூன்றரை லட்சம் கோடியாக உயர்த்த முடியும். தமிழகத்தைக் கொள்ளையடித்து ருசிகண்டவர்கள் தமிழகத்தை ஆளும் வரை இது சாத்தியமல்ல' என்று ராமதாஸ் கண்டித்துள்ளார்.

ராமதாஸ்


பா.ம.க நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2017-18-ம் ஆண்டில் தமிழக அரசின் வணிகவரி வருவாய் ரூ.73,000 கோடியாக உயர்ந்திருப்பதாக வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. மாறாக, வணிகவரி வருவாய்க்கான இலக்கை எட்ட முடியாமல் அரசு தோல்வியடைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2017-18 -ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், அந்த ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் ரூ.99,590 கோடியாகவும், வணிகவரி வரிவாய் ரூ.77,234 கோடியாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால், இந்த இலக்கை தமிழக அரசால் எட்ட முடியவில்லை. 2017-18-ம் ஆண்டில், தமிழக அரசின் வணிக வரி வருவாய் ரூ.73,000 கோடி மட்டுமே. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட ரூ.4,234 கோடி குறைவாகும். அதேபோல, சொந்தவரி வருவாய் ரூ.97 ஆயிரம் கோடியைக் கூட எட்ட முடியவில்லை. சொந்த வரி வருவாயாக ரூ.99,590 கோடி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.98,673 கோடியை ஈட்ட முடியும் என்று நடப்பாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறைக்கப்பட்ட இலக்கைக்கூட எட்ட முடியாமல் தமிழக அரசு பின்தங்கியுள்ளது.

வணிகவரி வருவாய் வசூல் இலக்கைவிட, சுமார் 5,000 கோடி அளவுக்கு குறைந்துவிட்டது ஒருபுறமிருக்க, அந்த வருவாயின் பெரும்பகுதி ஆரோக்கியமான வழிகளில் வந்ததல்ல என்பதுதான் குறிப்பிடத்தக்கது. வணிகவரி வருவாயில் பாதியளவு, அதாவது ரூ.36 ஆயிரம் கோடி மது விற்பனை மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரிகள்மூலம் கிடைத்தவை ஆகும். பெட்ரோல்மீது 34 விழுக்காடும், மது வகைகள் மீது 58 விழுக்காடும் வரி வசூலிப்பதன்மூலம்தான் இந்த அளவுக்காவது வருவாய் ஈட்ட முடிந்திருக்கிறது.

தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, பெட்ரோலும், டீசலும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கு கீழ் கொண்டு வரப்பட்டால், தமிழகத்தில் வணிக வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும். அதன்பின், ஜி.எஸ்.டி வருவாயில் மத்திய அரசு வழங்கும் பங்கைக் கொண்டுதான் தமிழக அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டியிருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தமிழகத்தில் மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதையும் மாநில அரசால் செயல்படுத்த முடியாமல்போகும்.

அரசுத் துறையில் காணப்படும் ஊழல்களை ஒழித்தால், தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாயை இப்போது இருப்பதைவிட இரு மடங்காக, அதாவது ரூ.1.76 லட்சம் கோடியிலிருந்து மூன்றரை லட்சம் கோடியாக உயர்த்த முடியும். தமிழகத்தை கொள்ளையடித்து ருசி கண்டவர்கள் தமிழகத்தை ஆளும் வரை இது சாத்தியமல்ல. இந்த நிலை மாறி, புதியதோர் தமிழகம் விரைவில் மலரும். அப்போது தமிழ்நாடு செழிப்பான, அனைத்து மக்களும் அனைத்து வசதிகளுடனும் வாழும் முன்னேறிய மாநிலமாகத் திகழும் என்பது உறுதி'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க