வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (02/05/2018)

கடைசி தொடர்பு:07:59 (02/05/2018)

'மாநில முதல்வர்கள் மாநாடு' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளார்.

முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளன்று, நாடு முழுவதும் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதுகுறித்து ஆலோசிக்க, அனைத்து மாநில முதல்வர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

எடப்பாடி பழனிசாமி

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டெல்லி வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். அவரது  அழைப்பை ஏற்று, முதல்வர் பழனிசாமி இன்று காலை 6.40 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

டெல்லியில், இன்று மாலை 5 மணிக்கு, குடியரசுத்தலைவர் மாளிகையில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. மாநிலங்களின் நிதி வளர்ச்சிகுறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி தனியாக சந்தித்துப் பேச உள்ளார். மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் சில அமைச்சர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

 பிரதமரைச் சந்திக்கும் முதல்வர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் தமிழகம் சார்ந்த  பிரச்னைகள்குறித்தும் ஆலோசிக்கத்  திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, காவிரி தொடர்பான தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகுறித்த விசாரணை, நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. காவிரிப் பிரச்னை மற்றும் தமிழகத்துக்கு வழங்கும் நிதியைக் குறைத்துள்ளது போன்ற சூழ்நிலையில், பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க