வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (02/05/2018)

கடைசி தொடர்பு:10:31 (03/05/2018)

கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியை தி.மு.க-வுக்கு விற்ற அமைச்சர் கே.பி. அன்பழகன் - கதறும் அ.தி.மு.க-வினர்..!

தமிழகத்தில் நடைபெற்றுவரும் கூட்டுறவு சங்கத் தேர்தலில், அமைச்சர்களின் விருப்பங்கள்தான் கூட்டுறவுத்துறையின் தேர்தல் விதிமுறைகளாக உள்ளன. கூட்டுறவுத் தேர்தலில் யார் இயக்குநராக வேண்டும், யார் தலைவராக வெற்றிபெற வேண்டும் என்று அமைச்சர்கள் முடிவுசெய்வதுதான் தேர்தல் முடிவாக இருக்கிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றசாட்டுகளைக் கூறிவருகின்றன. 

திமுக தலைவருக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்து

ஆனால், தருமபுரி மாவட்டத்தில் சின்னேரி மோட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில், தி.மு.க வெற்றிபெற்று பட்டாசு வெடித்துள்ளது. தி.மு.க-விற்கு இந்த வெற்றி எப்படி சாத்தியம் ஆனது? என்று அ.தி.மு.க-வினரிடம் விசாரித்தபோது, ஜெயலலிதாவுக்குப் பிறகு, அ.தி.மு.க என்ற ஒரு கட்சி கட்டுப்பாட்டை இழந்து சீர்குலைந்து போயிருக்கு, இங்க யாரும் இப்போ கேள்வி கேட்க முடியாது. புகார் கொடுக்கவும் உறுதியான தலைமை இல்லை. இதனால், தருமபுரியில் எல்லாமே எங்க மாவட்ட அமைச்சர் கே.பி அன்பழகன் தான். தேர்தல் நடந்து, அதில் தி.மு.க வெற்றிபெற்றிருந்தால், எங்களுக்கு இந்த வலி இருந்திருக்காது. ஆனால் இப்போ, ரொம்ப வலிக்குது என்கின்றனர் அ.தி.மு.க.வி-னர். 

கே.பி அன்பழகன்

சின்னேரி மோட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மொத்தம் 9 இயக்குநர்கள். இதில், அ.தி.மு.க தரப்பில் 7 இயக்குநரும், தி.மு.க தரப்பில் இலட்சுமணன், சண்முகம் ஆகிய இரண்டு இயக்குநர்கள் தேர்வானார்கள். அ.தி.மு.க-தான் வெற்றிபெறும் மார்க்கண்டன் அல்லது முருகனைத் தலைவர் ஆக்குவார் அமைச்சர் என்று எதிர்பார்த்தோம். ஆனால், தருமபுரி ஒன்றியச் செயலாளர் கோவிந்தசாமி, அமைச்சர் அன்பழகனிடம்  பேசி, தருமபுரி தி.மு.க விவசாய அணிச் செயலாளர் லட்சுமணனுக்கு ரூ.5 லட்ச ரூபாய்க்கு கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியை விற்பனை செய்துவிட்டார். கூட்டுறவு சங்கத் தலைவர் தேர்தலுக்கு அ.தி.மு.க சார்பாக மார்க்கண்டன் தாக்கல்செய்தபோது, வேட்பு மனு-வை அதிகாரிகளை மிரட்டி வாங்கவிடாமல் செய்துவிட்டார், ஒ.செ கோவிந்தசாமி. தி.மு.க-வைச் சேர்ந்த லட்சுமணனின் வேட்புமனு மட்டும் வாங்கிக்கொண்டு, தலைவராக வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டார்கள் அதிகாரிகள். 

சின்னேரி மோட்டுப்பட்டி கூட்டுறவு சங்கத் தேர்தலில், தலைவராக லட்சுமணன் வெற்றிபெற்றதும் அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் அழைத்துச்சென்ற ஒன்றியச் செயலாளர் கோவிந்தசாமி, அமைச்சருக்கு மாலையும் சால்வையும் அணிவித்து வாழ்த்துப் பெறுகின்றார். அதேபோல, தி.மு.க மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணியைச் சந்தித்து, வெற்றிபெற்றுவிட்டதாக மாலையும் சால்வையும் அணிவித்து, லட்சுமணன் வாழ்த்துப் பெறுகிறார். வாழ்த்துப்பெற்ற இரண்டு படங்களும் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க, தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இது குறித்து, அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால் அவரது பி.ஏ பொன்னுவேல்தான் பேசினார். "லட்சுமணன் சென்றவாரம் எங்கள் கட்சியில் இணைந்து விட்டார். அதனால்தான் அவரை தலைவராக்கினோம்" என்று தெரிவித்தார். திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பரமணியிடம் கேட்டதற்கு, "இல்லை கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆதரவு தந்ததற்கு நன்றி கூறி சால்வை அணிவித்தார் லட்சுமணன். அவர் திமுகதான்" என்று மறுப்பு தெரிவித்தார்.