'ஆந்திராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்' - திருப்பூர் பொதுக்கூட்டத்தில் சூளுரைத்த தினகரன்! | TTV dhinakaran speak at tirupur may day meeting

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (02/05/2018)

கடைசி தொடர்பு:10:00 (02/05/2018)

'ஆந்திராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்' - திருப்பூர் பொதுக்கூட்டத்தில் சூளுரைத்த தினகரன்!

திருப்பூரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தினகரன்

அதில், “தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த நகரம் என்பதால், இங்குதான் நம் மே தின பொதுக்கூட்டம் நடைபெற வேண்டும் என நம் அமைப்பின் நிர்வாகிகள் வலியுறுத்தினர். மகாபாரதத்தில் பாண்டவர்களிடமிருந்து திருடிச் செல்லப்பட்ட பொருள்களை, அர்ஜுனர் சென்று திரும்ப மீட்டு வந்த பகுதி என்பதால், இந்த ஊருக்கு திருப்பூர் என்று பெயர் வந்ததாகப் புத்தகத்தில் படித்தேன். அதேபோல, நாம் இழந்துவிட்ட கட்சியின் பெயரையும், சின்னத்தையும் நாம் திரும்ப மீட்பதற்காக, ஒரு திருப்புமுனையைத் தரக்கூடிய ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. அன்றைக்கு துரியோதனர் கூட்டம், பாண்டவர்களுக்கு வீடு தர முடியாது. நீங்கள் நாட்டை விட்டு கிளம்பி வனவாசம் செல்லுங்கள் என அநீதியுடன் சொன்னார்கள். ஆனால், அவர்களை பாண்டவர்கள் வீழ்த்தி வெற்றிபெற்று மீண்டும் இழந்த தேசத்தைக் கைப்பற்றினார்கள். அந்த சரித்திரம் இன்றைக்கு மீண்டும் திரும்பவிருக்கிறது என்பதை உணர்த்தவே நான் இங்கு பேச அழைக்கப்பட்  டிருக்கிறேன்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இன்னமும் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்க சசிகலாதான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மட்டும் நினைத்திருந்தால், அன்றைக்கே தான் முதல்வர் ஆகியிருக்க முடியும். அல்லது அவரது உறவினரான என்னை அந்தப் பதவியில் அமர வைத்திருக்க முடியும். ஆனால், ஜெயலலிதா இருந்தபோதே முதல்வராகப் பணியாற்றிய பன்னீர்செல்வமே முதல்வராக இருந்துவிட்டுப்போகட்டும் என பெருந்தன்மையுடன் சசிகலா கூறினார். எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அவரது மனைவி ஜானகியால்கூட அந்த ஆட்சியைத் தொடரச்செய்ய முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகும் சசிகலா மனது வைத்த காரணத்தால்தான், இங்கே ஆட்சி தொடர்கிறது. ஆனால், முதல்வராகப் பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் பாதை மாறிச் செல்கிறார். பி.ஜே.பி-யின் ஏஜென்ட்டாக இருக்கிறார். நம் கட்சியை மத்திய பி.ஜே.பி அரசிடம் அடகு வைத்துவிடுவார் சசிகலா என்றெல்லாம் புகார் கூறிவந்தார்.  சசிகலாதான் முதல்வர் ஆக வேண்டும் என அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்கள். பிறகு, சசிகலாவால் அந்தப் பதவியைத் தொடர முடியாமல்போன பிறகு பொறுப்புக்கு வந்த பழனிசாமி, ஒரே மாதத்தில் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்.

இன்றைக்கு, கட்சியின் தொண்டர்கள் அனைவரும்  நம்மிடம்தான் இருக்கிறார்கள். எனவே, எதையாவது செய்து அ.ம.மு.க-வை செயலிழக்கச் செய்துவிட வேண்டும் என்று நினைத்து, கடைசி ஆயுதமாக என் உறவினர்களில் சிலரை இப்போது தூண்டிவிட்டிருக்கிறார்கள். 2000 -ம் ஆண்டு ஜெயலலிதா என்னை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யச் சொன்னார். அன்று நான்  நிர்வாகிகளாக அடையாளம் காட்டிய 90 சதவிகிதம் பேர், இப்போது அமைச்சர்களாகவும் எம்.பி-க்களாகவும், எம்.எல்.ஏ- க்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்த துரோகம் என்னை 2007-ல் கட்சியை விட்டு ஒதுக்கிவைக்க காரணமாகிவிட்டது. பின்னர் ஜெயலலிதா மறைந்த பிறகு, சசிகலாவும் கட்சியின் தொண்டர்களும் என்னை ஏற்றுக்கொண்டதால்தான், இந்த இயக்கம் இப்போது சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இனி தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும், ஜெயலலிதாவின் ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கிக் காட்டும். ஆந்திராவின் அன்றைய முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைந்த பிறகு, கிரண்குமார் ரெட்டி என்பவர் குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வராகப் பொறுப்புக்கு வந்தார். ஆனால் இன்று, அவர் எங்கே இருக்கிறார் என்பதுகூட யாருக்கும் தெரியாது. வருங்காலத்தில், அதேபோன்றதொரு நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கும் அவருடன் இருக்கும் அமைச்சர்களுக்கும் ஏற்படப்போகிறது. ஆர்.கே. நகர் தொகுதியைப் போல நமக்கு தமிழகத்தின் 234 தொகுதிகளும் இருக்கின்றன” என்று முடித்தார்.

 

 


அதிகம் படித்தவை