கணவன் இறந்ததால் சோகம் - மகளைக் கொன்று தாய் தற்கொலை

இரண்டாவது கணவன் இறந்ததால், மகளைக் கொன்று தாய் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுஜித்ரா. (வயது 27). கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு புதுச்சேரியில் வசித்துவந்தார். தங்களின் காதலுக்கு சாட்சியாகப் பிறந்த ஒரே மகளான நிவேதாவை அன்பு மழையில் நனையவைத்து வளர்த்தார்கள். அனைத்துப் பெற்றோர்களையும்போல நிவேதாவை தனியார் பள்ளி ஒன்றில் படிக்கவைத்தார்கள். இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதலால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுஜித்ராவைப் பிரிந்துசென்றார் சுரேஷ். அதன்பின் அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால், சுஜித்ரா-சுரேஷ் இருவருக்குமிடையே இருந்த திருமண உறவு முறிந்தது. புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வரவேற்பாளராகப் பணிபுரிந்துவந்த சுஜித்ராவுக்கு, குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற கார் ஓட்டுநருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாறியதால், இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துவந்தனர்.  திடீரென ஏற்பட்ட விபத்து ஒன்றில் பிரபாகரன் இறந்துபோனார். முதல் கணவன் பிரிந்துவிட, இரண்டாவது கணவனும் இறந்துவிட்டதால் விரக்தியின் விளிம்புக்கே சென்றார் சுஜித்ரா. அரவணைப்பின்றித் தவித்த சுஜித்ரா, தனது வாழ்வை முடித்துக்கொள்ள முடிவெடுத்தார்.

தற்கொலை

தனக்குப் பின் தனது மகள் கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்று நினைத்த அவர், 5-ம் வகுப்பு படித்துவந்த நிவேதாவையும் கொலை செய்ய முடிவெடுத்தார். நேற்று முன்தினம், நிவேதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அக்கம்பக்கத்தினரிடம் கூறிய சுஜித்ரா, மெடிக்கலில் குளுக்கோஸ் பவுடர் வாங்கிவந்தார். அதில் தூக்க மாத்திரைகளைக் கலந்து தனது மகளுக்குக் கொடுத்தார். என்ன நடக்கிறது என்பது தெரியாமல், தனது தாய் அன்பாகக் கொடுத்த அந்த குளுக்கோஸைக் குடித்துவிட்டு படுத்த அந்தச் சிறுமியின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. அதன்பின், தூக்க மாத்திரைகளை விழுங்கியபின் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் சுஜித்ரா. மறுநாள் மதியம் வரை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், சுஜித்ராவின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, அங்கே இருவரும் உயிரிழந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து, அங்கே விரைந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, உறவினர்களிடம் உடல்களை ஒப்படைத்தனர். மகளைக் கொலைசெய்து தாய் தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!