தனது கார் ஓட்டுநர் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுத்த கலெக்டர்!

கலெக்டர் அன்பழகன்

தனக்கு கார் ஓட்டிய டிரைவரின் பணி ஓய்வு பெற்ற நாளில், அவரை தனது காரில் அமர வைத்து வீடுவரை காரை ஓட்டிச் சென்று பிரியா விடை கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.

கரூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருபவர் அன்பழகன். இவருக்கு கார் டிரைவராக பணியாற்றி வந்தவர் பரமசிவம். கரூரில் தொடர்ந்து பல மாவட்ட  ஆட்சியர்களுக்கு டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று பணி ஓய்வுபெற்றார். வழக்கம்போல் ஆட்சியரின் பணி முடிந்ததும், அவரை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லும் டிரைவர் பரமசிவம், அதற்காக காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே பணி முடிந்து வந்த ஆட்சியரை அழைத்துச் செல்ல தயாரானார்.

கார் டிரைவர் குடும்பத்தினருடன் கலெக்டர் அன்பழகன்

அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தான் வயது முதிர்வு காரணமாக இன்றுடன் பணி ஓய்வு பெறும் தகவலை தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் தன்னைப் போன்ற ஆட்சியர்களுக்கும் தனக்கும் கார் ஓட்டிய பரமசிவத்துக்கு மன நிறைவு பெறும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்த மாவட்ட ஆட்சியர், உடனே அதைச் செயல்படுத்தவும் செய்தார்.  அதாவது, ஓட்டுநர் பரமசிவத்தை தனது காரின் முன் இருக்கையில் அமரவைத்து, காரை தானே இயக்கினார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன். காரை இயக்கியவாறே பரமசிவத்தின் வீட்டு விலாசத்தைக் கேட்டார். அவர் அருகில் உள்ள காந்திகிராமத்தில் தன் வீடு இருப்பதைக் கூறியவுடன் காரை பரமசிவம் வீட்டை நோக்கி செலுத்தினார். வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டு அவரது குடும்பத்தாரையும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் ஆட்சியர் அன்பழகன்.

தன் பணிக் காலத்தில் பெரும்பாலான நாள்களில் கரூரில் பணிபுரிந்த ஆட்சியர்களுக்கு பரமசிவம் கார் ஓட்டும் பணியில் ஈடுபட்டார். மேலும், அவர் தனது பணிக்காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக சில விருதுகளும் பெற்றுள்ளார். அப்படிப்பட்ட டிரைவர் பரமசிவம் தான் பணி ஓய்வு பெறும் நாளில் மாவட்ட ஆட்சியர் தன்னை காரில் அமரவைத்து காரை ஓட்டி வந்து தனது வீட்டில் கொண்டு வந்து விட்டு, தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்த மாவட்ட ஆட்சியரின் செயலைப் பார்த்து நெகிழ்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!