'நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு'- தந்தையைக் கலங்கவைத்த மகனின் கடிதம்

தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால் மனமுடைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் 12-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால், மனமுடைந்த 12-ம் வகுப்பு படிக்கும் மகன், நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவன் தற்கொலை

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடுத்துவிட்டு வருவதை வழக்கமாகக்கொண்டிருந்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகிவந்துள்ளார்.

தினேஷ் நல்லசிவனின் அம்மா இறந்தபின், அவரது தந்தை மாடசாமி இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். ஆனாலும் குடிப்பழக்கத்தில் இருந்து மீளாத அவர், தொடர்ந்து குடும்பத்தில் சண்டையிட்டு வந்துள்ளார். நீட் தேர்வு 6-ம் தேதி நடக்க இருக்கும் நிலையில், தினேஷ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்த அவர், தந்தையுடன் தொலைபேசியில் பேசி யுள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த மாடசாமி, மகனிடம் கடுமையாகப் பேசியுள்ளார். இதனால் மனம் உடைந்த அவர், வீட்டிலிருந்து வெளியேறி, நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். அதைப் பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர் 

அதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறை உதவியுடன் உடலை கீழே இறக்கி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தினேஷ் நல்லசிவனின் பையை சோதனையிட்டபோது, அதில் நீட் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு, 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவை இருந்தன. அத்துடன், தனது தந்தைக்கு மனமுடைந்த நிலையில் எழுதிய கடிதமும் சிக்கியது. அதில், ’’அப்பா, நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு, எந்த காரியமும் செய்யக் கூடாது’’என எழுதப்பட்டிருந்தது

மேலும், தந்தை குடிக்காமல் இருந்தால்தான் தனது ஆன்மா சாந்தியடையும் என்றும், 'நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று  பார்ப்போம். இல்லாவிட்டால், ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்' என்றும் எழுதப்பட்டிருந்தது. நன்றாகப் படிக்கக்கூடிய மாணவனான தினேஷ் நல்லசிவன், தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!