கோவையில் விஸ்வரூபம் எடுக்கும் குட்கா... எஸ்.பி ஆபீஸை முற்றுகையிடும் தி.மு.க-வினரால் பதற்றம்

கோவை குட்கா விவகாரத்தில் தி.மு.க இன்று முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தி.மு.க போராட்டம்


கோவை, கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த குட்கா தொழிற்சாலையில், போலீஸார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதில், 75.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுதொடர்பாக ஆலையின் மேலாளர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்திய சிங்காநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தி.மு.க-வின் முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

குட்கா விவகாரம்
 

மேலும், அந்தக் குட்கா ஆலைக்கு, தளபதி முருகேசன் உதவி செய்ததாக, கோவை மாவட்ட எஸ்.பி மூர்த்தி கூறியிருந்தார். இது, தி.மு.க-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருத்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறையின் போக்கை கண்டித்து, கோவை எஸ்.பி அலுவலகம் இன்று முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கோவை மாவட்டம் முழுவதுமே இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்படுள்ளது. குறிப்பாக, கோவை எஸ்.பி அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அ.தி.மு.க அலுவலகம், அ.தி.மு.க எம்.எல்.ஏ அர்ஜூனன் அலுவலகம் போன்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், முழுவதும் சுமார் 2,000 போலீஸார்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பேரிகார்டுகள் போடப்பட்டு, கையில் லத்திகளுடன் காலை முதலே போலீஸார் அலெர்ட்டாக இருந்தனர். இதனிடையே, புறநகர் பகுதிகளிலிருந்து தி.மு.க-வைச் சேர்ந்த சிலர், முற்றுகைப் போராட்டத்துக்கு புறப்பட்டு வரும் வழியில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, கணியூர் டோல்கேட் போன்ற பகுதிகளில் போலீஸார் மப்ட்டியில் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதையும் மீறி 200-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர், எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, "தி.மு.க-வினர்மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும். குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஆளுங்கட்சி பிரமுகர்களைக் கைது செய்ய வேண்டும். குட்காவுடன் கூட்டணி வைத்த, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கரை கைது செய்ய வேண்டும்" என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தி.மு.க-வினரின் போராட்டத்தையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, ரயில்நிலையம்வரை சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினரை போலீஸார் கைது செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பொங்கலூர் பழனிச்சாமி, "குட்கா தொழிற்சாலை உரிமையாளர் அமித் ஜெயினுக்கு, தளபதி முருகேசன் உதவி செய்ததாக காவல்துறையினர் கூறுவது அப்பட்டமான பொய். இதே போல, இந்த விவகாரத்தில் எஸ்.பி உள்ளிட்ட காவலர்களுக்கும் தொடர்பு உள்ளது என எங்களாலும் குற்றம்சாட்ட முடியும்.  இந்த விவகாரத்தில், முறையான விசாரணைக்கு காவல்துறை உட்படுத்த வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!