திருநங்கைகளுக்கு கரம் கொடுத்த ரயில்வே - தொடங்கப்பட்டது புதிய அமைப்பு

ரயிலில் பிச்சையெடுக்கும் திருநங்கைகளுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றாற்போல் நிரந்தர வேலை வாங்கித் தருகிறது ரயில்வே போலீஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்த அமைப்பு. 

திருநங்கைகள்

Twitter Image

பிறக்கும்போது அனைவரையும்போல பிறந்து அதன் பிறகு, தங்களை அறியாமல் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்களால் வீட்டை விட்டும் சமூகத்தை விட்டும் ஒதுக்கி வைக்கப்படுபவர்களாக இருப்பவர்கள்தான் திருநங்கைகள். பாலின காரணத்தால் இவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. தன் குடும்பமே தன்னை ஒதுக்கிவிட்ட நிலையில் சாப்பாட்டுக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் நிறைய திருநங்கைகள் இன்றளவும் பிச்சையெடுப்பது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் அதிகமான திருநங்கைகள் இந்தத் தொழிலைச் செய்து வருகின்றனர். இதைத் தடுக்க ரயில்வே போலீஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்த அமைப்பு, ரயிலில் பிச்சையெடுக்கும் திருநங்கைகளுக்கு நிரந்தர வேலை தருவதற்கு முடிவு செய்துள்ளனர். 

முதலில் ரயில்வே போலீஸ் ஒரு குழுவை அமைத்தது. அதில் சமூகத்தில் பிரபலமான 12 திருநங்கைகள் உட்பட மொத்த 14 பேர் உள்ளனர். திருநங்கைகளுக்கு மறு வாழ்வு அளிக்கவே இது உருவாக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்றது. அதன் பின் இந்தக் குழுவை சேர்ந்தவர்கள் ரயிலில் பிச்சையெடுக்கும் சில திருநங்கைகளைக் கண்டறிந்து வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 

இது குறித்து பேசிய ரயில்வே காவல்துறைக் கண்காணிப்பாளர் விஜயா, “எங்களுக்கு சில பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு உண்டு. அதனால் திருநங்கைகள் அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பை எங்களால் ஏற்படுத்தித் தர முடியும். தகுதியானவர்கள் தங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க கேட்டுள்ளோம். நாங்கள் திருநங்கைகளுக்கு உதவுவதால் அவர்களுக்குள் உள்ள திறமையை அவர்களே உணர்வார்கள். மேலும், இதனால் அவர்கள் தங்களைச் சமூகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு திருநங்கைகள் நலச் சங்க உறுப்பினர் சுதா, “நாங்கள் ஒரே நாள் இரவில் இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என நினைக்கவில்லை. ஆனால், எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எல்லா இடத்திலும் திருநங்கைகள் உள்ளனர். ஆனால், சில இடங்களில் உள்ள சிலர் தங்களின் பணத் தேவைக்காகச் சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதைச் சரிசெய்ய நாங்கள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். சமூகத்தில் மதிக்கத்தக்க வேலையை அவர்களுக்கு வழங்க நினைக்கிறோம். இது மிகப்பெரிய காரியம் இருப்பினும் இதைச் சிறந்த முறையில் நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்” எனக் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!