வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (02/05/2018)

கடைசி தொடர்பு:14:41 (02/05/2018)

'மது தீமையால் பறிபோயிருக்கிறது ஓர் உயிர்' - பழனிசாமிக்கு எதிராக அன்புமணி காட்டம்

அன்புமணி

'மதுவை மக்களிடம் திணிக்கும் தமிழக அரசுதான் நெல்லை மாணவர் தினேஷின் தற்கொலைக்கு முழுப்பொறுப்பு. பல மாடசாமிகளை உருவாக்கும் முதலமைச்சர் பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்’ என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

அன்புமணி ராமதாஸ்
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுவுக்கு அடிமையான தந்தையை மீட்க முடியாததால் குடும்பம் சீரழிவதை சகித்துக்கொள்ள முடியாமல், தினேஷ் என்ற மாணவர் நெல்லை வண்ணாரப்பேட்டை தொடர்வண்டிப் பாலத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்லை மாவட்டம் குருக்கள்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மீட்க முடியாத அளவுக்கு மதுப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்தார். இதனால் அவரின் குடும்பம் சீரழிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. மாடசாமியின் மதுப்பழக்கத்தால் குடும்பத்தின் நிம்மதி, பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. இதற்குக் காரணமான மதுப்பழக்கத்தை கைவிடும்படி மாடசாமியிடம் 12-ம் வகுப்பு முடித்து மருத்துவப் படிப்பு படிக்க ஆயத்தமாகி வரும் அவரின் மகன் தினேஷ் மன்றாடியிருக்கிறார். ஆனால், அதை அவரின் தந்தை பொருட்படுத்தாததால் மனம் உடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சமூகத்தையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய ஓர் உயிர் மதுவின் தீமையால் பறிபோயிருக்கிறது. மாணவன் தினேஷின் தற்கொலைக்கு அவர் தந்தை மாடசாமி மட்டும் காரணமல்ல; தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான குடும்பங்களைச் சீரழித்து வரும் எடப்பாடி பழனிசாமியும்தான் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தினேஷின் சட்டைப் பையிலிருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தில் தந்தையின் குடிப்பழக்கத்தால்தான் தாம் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது இறுதிச் சடங்கில் தந்தை மாடசாமி கலந்துகொள்ளக் கூடாது என்று மாணவர் தினேஷ் குறிப்பிட்டிருக்கிறார். தமது தற்கொலைக்கு பிறகாவது தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் அவர் மன்றாடியிருக்கிறார். மாணவர் தினேஷிடமிருந்து நீட் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச்சீட்டு கைப்பற்றப்பட்டிருக்கிறது. மருத்துவம் படித்து சமூகத்துக்கு சேவை செய்திருக்க வேண்டிய ஒரு மாணவனின் உயிர் மதுவால் ஏற்பட்ட குடும்பச் சீரழிவு காரணமாகத் தற்கொலை செய்துகொண்டிருப்பது இதயத்தைக் காயப்படுத்துகிறது.

மாணவனின் தற்கொலை மதுவுக்கு எதிராக மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்றாலும்கூட, தற்கொலை போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தச் சிக்கலுக்கும் தற்கொலை தீர்வல்ல. உலகில் பிறந்த எந்தவொரு உயிருக்கும், தாய்க்கு அடுத்தபடியான உன்னதமான உறவு தந்தைதான். அத்தகைய தந்தை தமது இறுதிச்சடங்கில் பங்கேற்கக் கூடாது என்று தமது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு காயப்பட்டிருப்பார் என்பதை உணர முடியும். தமது மறைவுக்குப் பிறகாவது மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த இளைஞர் குறிப்பிட்டிருப்பதன் நோக்கம் தமது குடும்பத்தைப் போன்று மற்ற குடும்பங்களும் சீரழிந்துவிடக் கூடாது என்பதுதான். தினேஷின் குடும்பத்தைப் போன்று தமிழகம் முழுவதும் தெருவுக்கு ஒரு குடும்பம், தந்தையின் குடிப்பழக்கத்தால் சீரழிந்துகொண்டிருக்கிறது. தினேஷைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் கௌரவம் கருதி, மதுவால் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சீரழிவுகளை வெளிப்படையாகக் கூற முடியாமல் மனதுக்குள் போட்டு புதைத்து, புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லை. மக்களுக்கு மதுவைக் கொடுத்து சிந்திக்கும் திறனற்றவர்களாக மாற்றுவது; வாழ்க்கையில் முன்னேறாமல் மது அருந்த ரூ.100 அல்லது ரூ.200 கிடைக்காதா என்று ஏங்கும் நிலையிலேயே வைத்திருப்பது; அத்தகைய சூழலைப் பயன்படுத்தி ஓட்டுக்கு ரூ.100 அல்லது ரூ.200 கொடுத்து வாக்குகளை வாங்கி தேர்தலில் வெற்றி பெறுவது என்பதுதான் இந்நாள் ஆட்சியாளர்களுக்கும் முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் கொள்கையாக உள்ளது. தமிழகம் சந்திக்கும் அனைத்து சீரழிவுகளுக்கும் இதுதான் காரணம்.

பாமக 6 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3,321 மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் 90,000 மதுக்கடைகளை மூடியது. தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்தாத பினாமி அரசு, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாகக் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறந்தது. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறைத்தும் நெடுஞ்சாலைகளில் 1,300 மதுக்கடைகளை பினாமி அரசு திறந்தது. அதையும் எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சட்டப் போராட்டம் நடத்தி புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசரம் அவசரமாக மேல்முறையீடு செய்துள்ளது. மதுக்கடைகளை மூடுவதில் காட்டிய ஆர்வத்தைக் காவிரிப் பிரச்னையில் காட்டியிருந்தால் எப்போதோ அப்பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும்.

மாணவர் தினேஷின் தற்கொலை ஆட்சியாளர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும். இனியும் தாமதிக்காமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசின் முடிவுக்காகக் காத்திருக்காமல், மதுவிலக்கு நடைமுறையானால் மது ஆலைகள் தானாக மூடப்பட்டுவிடும் என்று வெட்டி வாதங்களைப் பேசிக்கொண்டிருக்காமல் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மது ஆலைகளை உடனே மூட அக்கட்சிகளின் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க