'போலீஸ் நினைத்தால் எதையும் செய்யலாம்' - சென்னையில் டிரைவிங் ஸ்கூல் ஓனரை சிக்கவைக்க 'கஞ்சா பிளான்' | Chennai driving school owner caught by police

வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (02/05/2018)

கடைசி தொடர்பு:19:20 (02/05/2018)

'போலீஸ் நினைத்தால் எதையும் செய்யலாம்' - சென்னையில் டிரைவிங் ஸ்கூல் ஓனரை சிக்கவைக்க 'கஞ்சா பிளான்'

கஞ்சா பிளான் போட்ட எம்.ஐ

 சென்னையில், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளரை சிக்கவைக்க, போலீஸ்காரர்மூலம் காரில் கஞ்சா வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுமூலம் இந்த 'கஞ்சா பிளான்' தவிடுபொடியானது.  

 சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்தவர், ஜெயவீரபாண்டியன். இவர், மந்தைவெளி ராணி அண்ணாதுரை சாலையில் டிரைவிங் ஸ்கூல் நடத்திவருகிறார். கடந்த ஏப்ரல் மாதம், தன்னுடைய காரில் பட்டினப்பாக்கம் காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள மைதானத்துக்குச் சென்றார். அங்கு, டிரைவிங் பயிற்சி முடிந்ததும் ஸ்கூலுக்கு வந்தார். அப்போது அபிராமபுரம் போலீஸார், அங்கு விரைந்து வந்தனர். ஜெயவீரபாண்டியனின் காரில் சோதனை நடத்தினர். காருக்குள் இருந்து கறுப்பு நிற பேக்கை எடுத்த போலீஸார், அதைத் திறந்து பார்த்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

 இதையடுத்து, ஜெயவீரபாண்டியனை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச்சென்றனர். அப்போது, கஞ்சா பொட்டலம்குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறினார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, பட்டினப்பாக்கத்தில் நீண்ட நேரம் காரை நிறுத்திய விவரத்தை போலீஸாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது, காரின் அருகே பைக்கில் வரும் ஒருவர், கறுப்பு நிற பேக்கை வைக்கும் காட்சி தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து, அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். 

விசாரணையில், கண்ணகி நகரைச் சேர்ந்த கருவாடு சத்யா என்ற கஞ்சா வியாபாரி என்று தெரியவந்தது. உடனே அவரை போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். அப்போது, கஞ்சா பொட்டலத்தை காரில் வைக்கச்சொன்னது, பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் முத்துகிருஷ்ணன் என்ற போலீஸ்காரர் என்று வாக்குமூலம் கொடுத்தார் சத்யா. அதன்அடிப்படையில் முத்துகிருஷ்ணனிடம் போலீஸார் விசாரித்தனர். இந்த வழக்கில் போலீஸ்காரருக்கு தொடர்பு என்ற தகவல் வெளியானதும், விரிவான விசாரணைக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சனம் தலைமையில் போலீஸார் விசாரித்தனர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 மந்தைவெளி ஆர்.டி.ஓ அலுவலகத்தில்  மோட்டார் ஆய்வாளராகப் பணியாற்றும் (எம்.ஐ.) ஒருவரும், போலீஸ்காரர் முத்துகிருஷ்ணனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ஜெயவீரபாண்டியன் விவகாரம்குறித்து ஆலோசித்துள்ளனர். அப்போது, லஞ்சம் தராத  ஜெயவீரபாண்டியனைப் பழிவாங்க வேண்டும் என்று  முத்துகிருஷ்ணனிடம் மோட்டார் ஆய்வாளர் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, கஞ்சா பிளான்குறித்து இருவரும் திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று, முத்துகிருஷ்ணனின் ஏற்பாட்டில் சத்யா மூலம் ஜெயவீரபாண்டியனின் காரில் கஞ்சா பொட்டலம் வைக்கப்பட்டுள்ளது. காரில் கஞ்சா இருக்கும் தகவலும் அபிராமபுரம் போலீஸாருக்கு ரகசியமாக போனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கஞ்சா வழக்கில் ஜெயவீரபாண்டியன் சிக்குவார் என்று கருதிய இவர்களை, சிசிடிவி கேமரா காட்டிக்கொடுத்துவிட்டது. போலீஸ்காரர் முத்துகிருஷ்ணன், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மோட்டார் ஆய்வாளரை போலீஸார் தேடிவருகின்றனர். 

 இதுகுறித்து ஜெயவீரபாண்டியனிடம் பேசினோம். "கடந்த ஏப்ரல் 17-ம் தேதி, டிரைவிங் லைசென்ஸ் பெறுபவர்களை அழைத்துக்கொண்டு காரில் பட்டினப்பாக்கத்துக்குச் சென்றேன். மோட்டார் வாகன ஆய்வாளர் முன்னிலையில் காரை ஓட்டிக்காட்டிய பிறகு, அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு ஸ்கூலுக்கு வந்தேன். அப்போது, என்னுடைய காரின் பின் இருக்கையில் கறுப்பு நிற பேக் இருப்பதைப் பார்த்தேன். அதுகுறித்து விசாரித்த சமயத்தில்தான் போலீஸார் அங்கு வந்தனர். காரில் சோதனை நடத்தினர். அப்போது, கறுப்பு பேக்கிலிருந்து கஞ்சா பொட்டலத்தை எடுத்த போலீஸார், என்னிடம் விசாரித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்தேன். விசாரணையில் கஞ்சாவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று கருதிய போலீஸார், என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். போலீஸ் விசாரணையில்தான் முழு விவரம் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் முத்துகிருஷ்ணனை நேரில் பார்த்ததில்லை. எங்கள் சங்கத்தின்மூலம்  சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புரோக்கர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினோம். அதற்காக, என்னை கஞ்சா வழக்கில் சிக்கவைக்க பிளான் போட்ட சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது. என்பக்கம் நியாயம் இருந்ததால் தப்பித்தேன்" என்றார். 

 போலீஸார் கூறுகையில், "இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. போலீஸ்காரர் முத்துகிருஷ்ணன், தன்னுடைய பணியை திறம்படச் செய்பவர். அந்தப் பகுதியில் உள்ள ஏழைக் குழந்தைகளைத் தன்னுடைய செலவில் படிக்கவைக்கிறார். அவர், இந்த வழக்கில் சிக்கியிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சிசிடிவி கேமரா பதிவு மூலம்தான் இந்த வழக்கில் அதிரடித் திருப்பம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட எம்.ஐ மீது விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம்" என்றார். 

 லஞ்சம் கொடுக்காததால், போலீஸ்காரர் ஒருவர் 'கஞ்சா பிளான்' போட்டுக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.