வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (02/05/2018)

கடைசி தொடர்பு:19:30 (08/05/2018)

‘இது அரசியல் பேசத் தடை செய்யப்பட்ட பகுதி’ - கல்லூரிகளுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை

'இனி, கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், அரசியல் பேசக்கூடாது' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி

தமிழகத்தில், கடந்த சில காலங்களாக அரசியல் பேச்சுகள் அதிகரித்துவருகின்றன. எந்த மேடை கிடைத்தாலும் தலைவர்கள் தங்களில் அரசியல் கருத்துகளை விலாசிவருகின்றனர். இதற்கு, பள்ளி மற்றும் கல்லூரி மேடைகளும் விதிவிலக்காக இருப்பதில்லை. பட்டமளிப்பு விழா முதல் கல்லூரிக் கலை நிகழ்ச்சிகள் வரை அனைத்திலும் அரசியல் பேசப்படுகிறது. இது, மாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதி, தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. 

அதில், 'இனி கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுபவர்கள், அரசியல் கருத்து, கட்சி, இயக்கம், அமைப்பு சார்ந்த கொள்ளைகளைப் பேசக் கூடாது' எனத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு சார்ந்த கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என அனைத்துக் கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

கல்லூரிகளில் அரசியல் பேசுவதால், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்றும், மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மை பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்லூரிகளில் அரசியல் கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.