வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (02/05/2018)

கடைசி தொடர்பு:14:39 (02/05/2018)

குழந்தைகளைப் பாதிக்கும் ஆஸ்துமா... தவிர்க்க, தப்பிக்க, எளிய வழிகள்! #Asthma

குழந்தை

 உலகம் முழுக்க ஆஸ்துமா பாதிப்பால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறக்கிறார்கள். அதில், பாதிக்குமேலானோர் குழந்தைகளே. இந்தியாவில்,டாக்டர் ஶ்ரீதரன் சராசரியாக 18-20 சதவிகிதக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது” என அதிர்ச்சியான தகவலைக் கூறும் குழந்தைகள் நலம் மற்றும் ஆஸ்துமா அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன், குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகளை முன்வைக்கிறார்.

"பெரியவர்களுக்கு வரும் ஆஸ்துமாவைப் போல குழந்தைகளுக்கு வரும் ஆஸ்துமா இருக்காது. பெரியவர்களின் நுரையீரல் செயல்பாட்டை நவீன மருத்துவ வளர்ச்சியின் காரணமாக கணினியின்மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். ஆனால், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் நுரையீரல் செயல்பாட்டை மிகத் துல்லியமாகக் கண்டறிவது மிகக் கடினம். அதனால், மருத்துவரின் அனுபவம், பயிற்சி, ஆஸ்துமாவிற்கான அறிகுறிகள் உள்ளிட்ட தனிப்பட்ட பல செயல்பாடுகளை வைத்து, குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவைக் கண்டறியலாம். பிறகு, சிகிச்சைகளைத் தொடங்கலாம்.

குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதற்கான அறிகுறிகள்: 

1. அடிக்கடி சளி பிடிப்பது மற்றும் நாளடைவில் அவை நெஞ்சுச் சளியாக மாறுவது.
2. அடிக்கடி தொடர் இருமல் வருவது மற்றும் இருமல்,சளியுடன்கூடிய வாந்தி வருவது.
3. மூச்சுவிடச் சிரமப்படுவது மற்றும் மூச்சுவிடும்போது விசில் சப்தம் வருவது.
4. மூச்சு விடும்போது விலா எலும்புகள், அதன் தசைகளுக்கிடையே பள்ளம் போல உள்ளே சென்று வருவது.
5. நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும்போது, திடீரெனச் சோர்வாகிவிடுவது. 
6. சிறிது தூரம் நடந்தாலோ அல்லது ஓடினாலோ, உடனே மூச்சிரைப்பு ஏற்படுவது.

குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படக் காரணங்கள்:

1. பெற்றோர் உள்ளிட்ட முந்தைய தலைமுறையினருக்கு ஆஸ்துமா தாக்கம் இருந்திருப்பது.ஆஸ்துமா
2. அடிக்கடி உருவாகும் தோல் (skin) அலர்ஜியால், ஒவ்வாமை ஏற்பட்டு, அவை ஆஸ்துமாவாக மாறும்.
3. சுற்றுப்புறச் சீர்கேடு, ஆஸ்துமா உருவாக இன்றைக்குப் பிரதான காரணியாக இருக்கிறது. காற்று மாசுபாடு அதிகரித்துவருவதால், அந்தக் காற்றைத் தொடர்ந்து சுவாசிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுகிறது.
4. அடிக்கடி துரித உணவுகளைச் சாப்பிடுவதால், ஃபுட் அலர்ஜி ஏற்பட்டு, அதனாலும் ஆஸ்துமா உருவாகலாம். 
5. நகரப்பகுதிகளில், அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்துவருகின்றன. இதற்காக மரங்களும் அழிக்கப்பட்டுவருகின்றன. இதனால், வீடுகள் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கையான காற்றோட்டம் குறைந்து, ஆரோக்கியமான ஆக்ஸிஜன் வாயுவை சுவாசிக்க முடியாமல்போகிறது. இதனாலும், நகரப் பகுதிகளில் ஆஸ்துமா அதிகரித்துவருகிறது. அதனால், கிராமப்புறப் பகுதிகளில் பாதிப்பு இருக்காது என்றில்லை. நகரப்பகுதியைவிட பாதி அல்லது அதற்கு சற்று குறைந்த அளவில் அங்கும் பாதிப்பு அதிகரித்துவருகிறது.

தீர்வுகள்:

1. ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த, இதுவரை மருத்துவ வளர்ச்சி ஏற்படவில்லை. ஆனால், அதன் தாக்கத்தை பெருமளவுக்குக் கட்டுப்படுத்தலாம்.
2. இன்ஹேலர் (inhaler) மருந்துகளை நேரடியாக மூச்சுக்குழலுக்குள் செலுத்துவது அல்லது நெபுலைஸர் (nebuliser) திரவ வடிவ மருந்தை வாயு வடிவத்துக்கு மாற்றி மூச்சுக் குழலுக்குள் செலுத்துவதால், ஆஸ்துமா தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
3. குழந்தை பிறந்த முதல் ஒரு வருடம், தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பசும்பால் உட்பட மற்ற எந்தப் பால் மற்றும் உணவுப் பொருள்களையும் கொடுக்கக் கூடாது.
4. கொசு, கரப்பான் பூச்சு உள்ளிட்டவற்றை விரட்ட எந்த ரசாயனப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது.
5. ஆஸ்துமா பாதிப்புள்ள குழந்தைகள் உள்ள வீட்டில், இண்டோர் பிளான்டுகள் மற்றும் செல்லப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்க்கலாம்.
6. குழந்தைகளின் படுக்கை மற்றும் பிற துணி வகைகளில், கண்ணுக்குத் தெரியாத ‘டஸ்ட் மைட் ( dust mite)’ நுண்ணுயிரிகள் இருக்கும். அதனால், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே, குழந்தைகளின் துணிகளை முறையே துவைத்துக் காயவைப்பது நல்லது.
7. வீட்டில், எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரால், எந்த இடத்திலும் பூஞ்சைகள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
8. குழந்தைகளுக்குத் துரித உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டு உணவுகளைச் சாப்பிட வைக்க வேண்டும்.
9. குழந்தைகள் வெளியில் விளையாடச் சென்றால், மாஸ்க் பயன்படுத்துவதைக் கட்டாயப்படுத்தலாம். 
10. கர்ப்பிணிப் பெண்கள், சிகரெட் உள்ளிட்ட பிற நச்சுப் புகையை சுவாசிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். மீறினால், தாய் மற்றும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படலாம்.

குழந்தைகள்

பொதுவாக, உடலுக்கு வரக்கூடிய சிறிய பாதிப்புகளில் ஒன்றுதான் ஆஸ்துமா என நீங்கள் அஜாக்கிரதையாக மதிப்பிட்டால், அது மிகப்பெரிய தவறு. இன்றைக்கு உலகை அச்சுறுத்திவரும் மிக மோசமான பாதிப்புகளில் ஆஸ்துமா முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில், ஆஸ்துமா மிக வேகமாக அதிகரித்துவருகிறது. டெல்லிக்கு அடுத்து மிக வேகமாகக் காற்று மாசுபடும் நகரம் சென்னைதான். பாதிப்பு வந்த பிறகு அதன் தீவிரத்தைக் குறைக்கப் போராடுவதை விடுத்து, பாதிப்பு வரும் முன்னரே அதன் தன்மையை உணர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது” என ஆலோசனை கூறுகிறார், டாக்டர் ஸ்ரீதரன்.


டிரெண்டிங் @ விகடன்