வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (02/05/2018)

கடைசி தொடர்பு:16:35 (02/05/2018)

'நாங்கள் எச்சரிக்கை செய்தோம்' - குரங்கணி தீ விபத்து தொடர்பாக மத்திய அரசு பதில்

''நாங்கள் எச்சரிக்கை செய்தோம்.!'' - குரங்கணி விபத்து தொடர்பாக மத்திய அரசு பதில்.!

குரங்கணி தீ விபத்து

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலர் பலியான சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். தேனி, சென்னை, ஈரோடு ஆகிய பகுதிகளில் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, காட்டுத்தீ தொடர்பாக வழக்கறிஞர் ராஜீவ் தத்தார் டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், குரங்கணி தீ விபத்து தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இன்று மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ''குரங்கணி விபத்து ஏற்பட்ட ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.28 மணிக்கு மத்திய வனத்துறையின் பாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா மூலம் தமிழக வனத்துறைக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இந்த எச்சரிக்கை இமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 18-ம் தேதிக்குள் அதுல்யமிஸ்ரா தனது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது பசுமைத் தீர்ப்பாயம்.