வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (02/05/2018)

கடைசி தொடர்பு:15:29 (02/05/2018)

''சசிகலாவைச் சந்திக்கச் சென்றாலே சிக்கல்தான்!" - ஜெய் ஆனந்த் பேட்டி

அவர் துக்க நிகழ்வுக்காக வந்திருக்கிறார். அப்படியொரு தருணத்தில், அவரிடம் இதைப் பற்றிப் பேசுவது என்பது நாகரிகமாக இருக்காது என நினைத்தோம். தவிர, தினகரன் பிடியில் சிறைப்பட்டிருக்கிறார் சசிகலா என்பதுதான் உண்மை என்கிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்

''சசிகலாவைச் சந்திக்கச் சென்றாலே சிக்கல்தான்!

ஜெய் ஆனந்த்

தினகரன், திவாகரன் மோதல் நாளுக்குநாள் வலுத்துக்கொண்டே செல்கிறது. தினகரனுக்கு எதிராக அம்மா அணி என்ற பெயரில் புதிய கட்சியின் அலுவலகத்தை மன்னார்குடியில் திறந்திருக்கிறார் திவாகரன். விரைவில் சென்னையிலும் அலுவலகம் திறக்கப்படும். இளைஞர்களை ஒன்றிணைத்து, அறிவியல்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவோம்' எனக் கூறியிருக்கிறார் திவாகரன். இதற்கு எதிராகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் தினகரன். இந்நிலையில், இன்று சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், 'எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவில்லை. தொண்டர்களை ஒருங்கிணைத்துச் செயல்படுவோம்' எனப் பேசினார். 

ஜெய் ஆனந்திடம் பேசினோம். 

தினகரனோடு மோதல் ஏற்படுவதற்கு உண்மையில் என்ன காரணம்? 

''அவர் ஒரு நல்ல தலைமையாக இருப்பார் என எதிர்பார்த்துப் போனோம். அதற்கான அறிகுறிகள் அங்கு தென்படவில்லை. இதற்கு மேலும் அவர்களுடன் பயணம் செய்வது சரியாக இருக்காது என முடிவு செய்து விலகிவிட்டோம். கடந்த ஆறு மாதங்களாக நிறைய அவமதிப்புகள் ஏற்பட்டன. அது எல்லையை மீறியதால்தான், இப்படியொரு முடிவை எடுத்தோம்". 

பரோலில் சசிகலா வந்தபோதே இதைத் தெரிவித்திருக்கலாமே? 

''அவரிடம் (சசிகலா) இதைப் பற்றி நேரடியாகப் பேசுவதற்கு நாங்கள் முயற்சி எடுக்கவில்லை. அவர் துக்க நிகழ்வுக்காக வந்திருக்கிறார். அப்படியொரு தருணத்தில், அவரிடம் இதைப் பற்றிப் பேசுவது என்பது நாகரிகமாக இருக்காது என நினைத்தோம். தவிர, தினகரன் பிடியில் சிறைப்பட்டிருக்கிறார் சசிகலா என்பதுதான் உண்மை. அவர் சிறைக்குச் சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது. சிறையைச் சுற்றிலும் தினகரன் தரப்பு வழக்கறிஞர்களும் ஆள்களும்தாம் இருக்கிறார்கள். சசிகலாவைப் பார்த்துப் பேச முயற்சி செய்தாலே, சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள். அவர் முன்பு நேரில் சென்று அமர்ந்தால், சுற்றிலும் நான்கு பேர் உடன் வந்து உட்கார்ந்துவிடுகின்றனர். எந்தக் குறைபாட்டையும் யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார்". 

அம்மா அணியை சசிகலா ஏற்றுக் கொள்வாரா? 

''சிறையிலிருந்து அவர் வெளியில் வந்தபிறகு, விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஒரு பொதுவான நபராக அனைத்தையும் அவர் விசாரிக்க வேண்டும்". 

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உங்கள் ஆதரவு இருக்கிறதா? 

''ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்க்கு ஆதரவு என எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. அம்மா இறந்தபிறகு, ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்ஸுக்கு சின்னம்மா ஆதரவு கொடுத்ததால், நாங்களும் ஆதரவு கொடுத்தோம் என்றுதான் என் அப்பா சொன்னார். 'இந்த ஆட்சிக்கு ஆதரவு' என எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் துரோகம் செய்தார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்தத் துரோகத்தை அவர்களாகச் செய்தார்களா...அவர்கள் வெளியேறுவதற்குத் தள்ளப்பட்டார்களா என்பதைத்தான் விசாரிக்க வேண்டும். எங்களை வெளியேற்றியதைப் போல, அவர்களையும் வெளியேற்றியிருப்பார்களா எனச் சந்தேகப்படுகிறோம்.

அனைவரையும் கலந்து பேசும்போதுதான் இந்த உண்மை வெளிவரும். அவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்து வெளியேற்றிவிட்டு, துரோகப் பட்டத்தைக் கட்டிவிட்டார்களா என்பதைத்தான் கவனிக்க வேண்டும். தன்மானத்தை இழந்து அரசியல் செய்கிறவர்கள், நல்ல அரசியல்வாதியாக இருக்க முடியாது. அதனால்தான், தினகரனைச் சுற்றியிருப்பவர்கள் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர் இப்படியே அவமதித்துச் செயல்பட்டுவந்தால், வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை. இதைத்தான் நாங்களும் சொன்னோம். அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைச் சொன்ன பிறகுதான், பன்மடங்கு அவமானப்படுத்தினார்கள்". 

தினகரன் அணியிலிருந்து உங்கள் அணிக்குத் தொண்டர்கள் வருவார்களா? 

''நாங்கள் எதையும் திட்டமிட்டுச் செய்யவில்லை. தற்செயலாகத்தான் அனைத்தும் நடந்து வருகிறது. எங்களுக்கு எந்த அஜென்டாவும் இல்லை. இதுதான் எங்கள் இலக்கு எனத் திட்டமிட்டு செயல்படுகிறோம். அம்மா அணியின் எந்தப் பொறுப்பிலும் நான் இருக்கப் போவதில்லை. தனியாக ஓர் அணி எனக் கிளம்பி, உடனே ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை. அடுத்தகட்டமாக, தொண்டர்களை எல்லாம் ஒன்றிணைத்து, அவர்களின் விருப்பப்படி செயல்படுவோம்". 
 


டிரெண்டிங் @ விகடன்