பிக்பாஸ் 2 ... ஷூட் கிளம்பினார் கமல்ஹாசன்

பிக்பாஸ் இரண்டாவது சீசன் ப்ரமோ ஷூட் தொடங்கியது

தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அறிமுகமாகி கடந்தாண்டு பலத்த வரவேற்பைப் பெற்ற ஷோ பிக் பாஸ். 'ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது' என்றபடி, புதிய பரிமாணத்தில் ஆங்கராகக் களம் இறங்கினார் கமல். தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட அந்த வீட்டுக்குள் போட்டியாளர்கள் கூடி உட்கார்ந்து பேசும் புறணியைக் கேட்பதற்கென்றே 9 மணிக்கு டிவி முன் உட்கார்ந்தவர்கள் நிறைய பேர். அந்த ஒரேயொரு ஷோ மூலம் கொஞ்சம் தொய்வடைந்திருந்த நிலையிலிருந்த சேனலும் நிமிர்ந்து உட்கார்ந்தது. ஒருவழியாக ஷோ முடிவடைந்து ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

கமல்ஹாசன்

 

அன்று முதலே 'பிக்பாஸ் 2' எப்போது என்ற பேச்சு எழத் தொடங்கிய நிலையில், தற்போது அந்த இரண்டாம் சீஸனுக்கான வேலைகள் விறுவிறுப்படைந்திருக்கின்றன. வடக்கே 'பிக்பாஸ்' நிகழ்ச்சி கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பானதால் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கும் 'கலர்ஸ் தமிழ்' சேனலிலேயே பிக்பாஸ் 2 ஒளிபரப்பாகும் என முதலில் பேசப்பட்டது. ஆனால், அந்தச் செய்தி உண்மையில்லை. 'பிக்பாஸ் 2' விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகிறது. இந்தாண்டும் ஷோவைத் தொகுத்து வழங்குவது கமல்தான். கமலுடனான ப்ரமோ ஷூட் முடிந்துவிட்டது என்கிறார்கள். சென்ற ஆண்டே ஷோவில் அங்கங்கே அரசியல் பேசிய கமல், 'மக்கள் நீதி மய்ய'த் தலைவரான பின் கலந்துகொள்வதால், இந்தாண்டு எக்ஸ்ட்ராவாக எகிறி அடிப்பாரென நம்பலாம்.

இன்னொரு புறம் போட்டியாளர்களைத் தேடும் பணியையும் முடுக்கிவிட்டிருக்கிறார்கள். 'இந்தாண்டாவது சினிமாவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறவர்களை இழுத்து வர வேண்டும்' என்பதே சேனலின் கட்டளையாம். அதேபோல் டிவி, சினிமா இரண்டும் தாண்டி மற்ற துறைகளிலிருந்தும் இந்தாண்டு பெரிய பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.

'பிக்பாஸ் வீட்டுக்கு வர்றீங்களா' என விரிக்கப்பட்ட வலையில் சிலர் சிக்கியிருக்கிறார்கள். சிலர் எஸ்கேப். சிலர் 'போகவா வேண்டாமா' என்கிற குழப்பத்தில். கடந்தாண்டு கலந்துகொண்ட சிலரிடம் 'தெரிஞ்சவங்களை ரெகமன்ட் பண்ணுங்க' என்றுகூடக் கேட்டிருக்கிறார்களாம்.

'ஜூன் மாதத்திலிருந்து மறுபடியும் அரங்கேறலாம் பிக்பாஸ்' என்கிறது கடைசித் தகவல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!