வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (02/05/2018)

கடைசி தொடர்பு:17:09 (02/05/2018)

'ஸ்டாலின் மீது ஏன் பாய்ந்தார் விஜயகாந்த்?' - ராகுல், திருமாவளவன் சந்திப்பு பின்னணி 

'நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி முயற்சிக்கு ஸ்டாலின் ஆதரவு கொடுத்தால், அதற்கு எதிராக மாபெரும் அணியை அமைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார் ராகுல். அதன் தொடக்கமாகத்தான் திருமாவைச் சந்தித்தார்' என்கின்றனர் வி.சி.க வட்டாரத்தில். 

'ஸ்டாலின் மீது ஏன் பாய்ந்தார் விஜயகாந்த்?' - ராகுல், திருமாவளவன் சந்திப்பு பின்னணி 

 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் கட்சிகளின் கவனத்தை திருப்பியிருக்கிறது. 'நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி முயற்சிக்கு ஸ்டாலின் ஆதரவு கொடுத்தால், அதற்கு எதிராக மாபெரும் அணியை அமைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார் ராகுல். அதன் தொடக்கமாகத்தான் திருமாவைச் சந்தித்தார்' என்கின்றனர் வி.சி.க வட்டாரத்தில். 

ராகுல்-திருமாவளவன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மேடை அமைக்கும் பணியில் தேசிய, மாநிலக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மூன்றாவது அணி முயற்சிக்கு, ஸ்டாலின் வாழ்த்து கூறினார். இந்தச் செயல் காங்கிரஸ் வட்டாரத்தை அதிர வைத்தது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் வருகையும் அதையொட்டி தி.மு.க-வின் அரசியல் முன்னெடுப்புகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்நிலையில், நேற்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்துப் பேசியிருக்கிறார் ராகுல். 'இப்படியொரு திடீர் சந்திப்பு ஏன்' என்ற கேள்விக்கான விடை, அறிவாலய நிர்வாகிகளுக்குத் தெரிந்திருக்கிறது.

'மூன்றாவது அணி முயற்சி வெற்றிபெற்றால், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும். அதன் முன்னோட்டமாக ஸ்டாலினுக்குச் செக் வைக்கும் வகையில் திருமாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ராகுல்' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். இந்தச் சந்திப்பு குறித்துப் பதிவிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், 'காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் வகையில் அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நன்றி கூறினோம். ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 'தேசம் காப்போம்’ என்ற தலைப்பில் நடத்தவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தோம். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஸ்டாலின்ராகுல் உடனான சந்திப்பு குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர். ''மம்தா முயற்சிக்கு ஸ்டாலின் ஆதரவு என்ற தொனியில் செய்தி வெளியானபோதே, அவர் வாழ்த்துதான் தெரிவித்தார் என தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் விளக்கம் கொடுத்தனர். இருப்பினும், மூன்றாவது அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் தி.மு.க தீவிரமாகச் செயல்படுவதாக அறிகிறோம். இதையடுத்துத்தான், தமிழகத்தில் வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ராகுல்" என விவரித்தவர், ''தற்போது காங்கிரஸ் கட்சியுடன் நல்ல புரிதலில் இருக்கிறார் தினகரன். மாநிலத் தலைவர் திருநாவுக்கரசருடன் அவர் தொடர்பில் இருக்கிறார். 'அடுத்த தலைமையாக தினகரன் உருவெடுத்து வருகிறார்' என வெளிப்படையாகவே பேசினார் திருமாவளவன். பொதுவாக, தலித் வாக்குகள் என்பது அ.தி.மு.க, காங்கிரஸ் பக்கம்தான் கணிசமான அளவுக்குச் சென்று சேருகிறது. இப்போது அ.தி.மு.க என்பது ஜெயலலிதாவுக்குப் பிறகு, தினகரனை நோக்கித்தான் செல்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

வடமாவட்டங்களில் தன்னுடைய அமைப்பை நல்லமுறையில் ஒருங்கிணைத்து வருகிறார் தினகரன். இதையொட்டி, காங்கிரஸ் - தினகரன் கூட்டணி முடிவாகும் என்ற பேச்சு எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாகப் பா.ம.க-வுடன் தி.மு.க நெருங்கிச் செல்கிறது. எனவே, மூன்றாவது அணியை நோக்கி ஸ்டாலின் செல்லும்போது, பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டியது கட்டாயமாகிறது. காங்கிரஸ் இல்லாத விஜயகாந்த்மூன்றாவது அணி உருவானால், அது பா.ஜ.க-வுக்குச் சாதகமாகப் போகும். எனவேதான், 'காங்கிரஸ் அணியில் நாங்கள் இருப்போம்' என உறுதியாகத் தெரிவித்தார் திருமாவளவன். 'தி.மு.க என்ன முடிவெடுத்தாலும் பரவாயில்லை' என்பதை இந்தப் பேச்சு நேரடியாகச் சுட்டிக் காட்டியது. காங்கிரஸ் அணியில் தி.மு.க இல்லாவிட்டால், அந்த இடத்தில் தினகரன் இருப்பார். தவிர, காங்கிரஸ் இருக்கும் அணியில்தான் முஸ்லிம் லீக் கட்சியும் இருக்கும். இத்தனைக்கும் தி.மு.க-வின் பாரம்பர்ய கூட்டணிக் கட்சியாக முஸ்லிம் லீக் இருக்கிறது. கேரளாவில் உள்ள முஸ்லிம் லீக் தலைவர்கள், சோனியா காந்தியுடன் நட்புறவில் உள்ளனர். காங்கிரஸ்தான் அவர்களுக்கு இயல்பான கூட்டணியாக இருக்க முடியும். 

தினகரனுடன் மனிதநேய மக்கள் கட்சி நட்பில் உள்ளது. சி.பி.எம் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் முடிவும் காங்கிரஸ் பக்கம்தான். 'நேரடி போட்டி இல்லாத மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி' என்ற முடிவில் இடதுசாரிகள் உள்ளனர். மூன்றாவது அணியை மம்தா முன்னெடுத்தாலும் இடதுசாரிகள், நிச்சயமாக காங்கிரஸ் பக்கம்தான் நிற்பார்கள். அதேபோல், சில காலம் தி.மு.க-வைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜயகாந்த், ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்தார். இதுவரையில் தினகரனுக்கு எதிராக விஜயகாந்த் எந்தக் கருத்தையும் கூறியதில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால், ராகுல் கணக்கு மிகத் தெளிவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ், தினகரன், தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ, முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி என வலுவான அணி அமைவதற்கான சூழல்கள் கனிந்து வந்துள்ளன. இப்படியொரு முயற்சி வெற்றிபெற்றால், வரும் காலங்களில் தி.மு.க இருந்தால்தான் அந்த அணி வெற்றி பெறும் என்ற பிம்பமும் உடைபடும். ஏற்கெனவே, மூன்றாவது அணிக்கான விதையைத் தமிழகத்தில் முதன்முதலில் தூவியது திருமாதான். அதனால்தான், இந்த முயற்சிக்கு திருமாவையே முன்னிறுத்துகிறார் ராகுல்காந்தி" என்றார் விரிவாக. 


டிரெண்டிங் @ விகடன்