வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (02/05/2018)

கடைசி தொடர்பு:21:07 (02/05/2018)

இளைஞர்களின் மார்பில் சாதி முத்திரையைக் குறிப்பதா? - ம.பி. அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

காவலர் தேர்வுக்கு வந்த இளைஞர்களின் மார்பில் சாதியைக் குறிப்பிட்டு முத்திரையிட்டது தொடர்பாக, மத்தியப்பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், காவலர் தேர்வுக்காக வந்த இளைஞர்களிடம் கடந்த ஏப்ரல் 29 ம் தேதியன்று, அங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் உடல்தகுதிப் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, இட ஒதுக்கீட்டுப் பயனாளிகளுக்கு மட்டும், அவர்களின் மார்பில் பட்டியல் சாதி, பழங்குடியினர், இதரப் பிற்படுத்தப்பட்ட சாதியினர் எனப் பச்சை குத்தியதைப் போல முத்திரை குத்தப்பட்டது. இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி, சமூக ஊடகங்கள் மூலம் அதிக அளவில் பரவியது. இந்நிலையில் இந்த விவகாரத்தை தேசிய மனிதவுரிமை ஆணையமானது, தானாகவே வழக்குப்பதிவு செய்துகொண்டு, விசாரித்துள்ளது. 

''ஏப்ரல் 30ம் தேதி வெளியான ஊடகச் செய்திகளின் மூலம் இந்த விவகாரத்தை சுயவழக்காக ஆணையம் எடுத்துக்கொண்டது. காவலர் தேர்வுப் போட்டியாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாமல் தடுக்க, சாதி முத்திரை குத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது. பொது பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் உயரம், மார்பளவு மாறுபட்டதாகவே இருக்கும். ஆனால், பொதுப் பிரிவுப் போட்டியாளர்களுக்கு மார்பில் முத்திரை குத்தப்படவில்லை. இந்தச் செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்நிகழ்வு பாகுபாடானதும் இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த போட்டியாளர்களை இழிவுபடுத்தக்கூடியதுமாகும். அதிகாரிகளின் இப்படியான வெறுக்கத்தக்க நடத்தை, நாகரிகமடைந்த சமூகத்தில் எந்தச் சூழலிலும் சகித்துக்கொள்ளமுடியாத ஒன்றாகும். தனிமனித கண்ணியத்தையும் சமத்துவத்தையும் மீறுவதற்கே இது வழிவகுக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை எடுத்தது உட்பட இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை ம.பி. அரசின் தலைமைச்செயலாளர் மற்றும் போலீஸ் தலைமை இயக்குநர் இருவரும் நான்கு வாரங்களுக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தேசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.