வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (02/05/2018)

கடைசி தொடர்பு:20:41 (02/05/2018)

தமிழகத்தில் முதல்முறையாக தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வைக்கப்பட்ட சீல்... ஏன்?

சர்க்கரை உற்பத்தி அபரிமிதமாக அதிகரித்ததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 203 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. அப்பொழுது ஒரு டன் சர்க்கரையின் விலை 3700 ரூபாய் ஆக இருந்தது.

தமிழகத்தில் முதல்முறையாக தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வைக்கப்பட்ட சீல்... ஏன்?

சர்க்கரை ஆலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் உற்பத்தி செய்து தரும் கரும்புக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் உரிய காலத்தில் பணம் கொடுப்பதில்லை. விவசாயிகளின் வயிற்றில் அடிக்க, ஆலை நிர்வாகம், பலவிதமான தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதைத் தட்டிக் கேட்டு விவசாயிகளுக்கு பணத்தை பெற்றுத் தர வேண்டிய ஆட்சியாளர்களோ, ஆலை நிர்வாகத்திற்கு மறைமுகமாகத் துணை நிற்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில்தான் விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தும் விதமாக தமிழ்நாட்டில் முதல்முறையாக அதிசயம் நிகழ்ந்துள்ளது. 

சர்க்கரை ஆலை

ஏப்ரல் 30-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் தஞ்சாவூரில் உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரைஆலை மற்றும் கடலூரில் உள்ள பெண்ணாடம் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலையில் உள்ள குடோன்களை வருவாய்த்துறை அதிகாரிகள் இழுத்துப் பூட்டி சீல் வைத்தார்கள். விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுத்த கரும்புக்கு பணம் கொடுக்காமல் நீண்டகாலமாக இழுத்தடித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். ஆனால் இது கண் துடைப்பு நாடகம் என ஆதங்கப்படுகிறார்கள் விவசாயிகள் சங்க நிர்வாகிகள்.   

விமலநாதன்கரும்பு விவசாயிகளுக்காகத் தொடர்ப் போராட்டங்களை நடத்தி வரும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் ‘திருஆரூரான் சர்க்கரை ஆலை 2016-17, 2017-18 ஆகிய இருஅரவை ஆண்டுகளுக்கும் விவசாயிகளுக்கு 40 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்துள்ளது. மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு நியாயமான ஆதரவு விலையாக 2550 ரூபாய் அறிவித்திருந்தது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதில் சிறு தொகையைக் கூட ஆரூரான் சர்க்கரை ஆலை கொடுக்கவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடத்தி வந்தோம். இந்நிலையில்தான் தற்பொழுது தஞ்சை மாவட்ட நிர்வாகம், வருவாய் வசூல் சட்டத்தின்கீழ்  திருஆரூரான் சர்க்கரை ஆலையில் உள்ள  குடோனுக்கு சீல் வைத்துள்ளது.  குடோனில் 1506 டன் சர்க்கரை மூட்டைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது மிகவும் காலதாமதமான நடவடிக்கை. பெரும்பகுதி சர்க்கரையை விற்பனை செய்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சீல் வைக்கப் போகும் தகவல் முன் கூட்டியே ஆலை நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்பட்டதால், பெரும்பாலான சர்க்கரை மூட்டைகளை ஆலை நிர்வாகம், இங்கிருந்து அப்புறப்படுத்தி, வெளியில் எங்கயோ கொண்டு சென்று விட்டது. சீல் வைக்கப்பட்டுள்ள சர்க்கரையை விற்பனை செய்தால் 3 கோடி ரூபாய் தான் வருமானம் கிடைக்கும். இங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கு வர வேண்டிய தொகையோ 40 கோடி ரூபாய். ஆலையில் உள்ள அசையும் சொத்து, அசையா சொத்து அனைத்தையும் சீல் வைத்து, ஏலம் விட்டு விவசாயிகளின் பணத்தை மீட்டுத் தர வேண்டும், 

சர்க்கரைஆலைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு இடையேயான கண்ணாமூச்சி விளையாட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. நாங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக திருஆரூரான் சர்க்கரை ஆலை மீது வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கு 2016-ம் ஆண்டு சர்க்கரைத்துறை இயக்குநராக இருந்த காசிராஜன் மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார். அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருந்தால் குடோனில் அதிகமாகச் சர்க்கரை இருந்ததால், 11 கோடி ரூபாய் வசூல் செய்து விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கலாம். மாவட்டம் நிர்வாகம் இன்று வரை ஆலைக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. விவசாயிகள் கொடுக்கும் கரும்பினால் ஆரூரான் நிர்வாகம், பல வகைகளிலும் கோடிக்கணக்கில் லாபம் எடுக்கிறது. கரும்பு சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது. 1996-ம் ஆண்டு 28 கோடி ரூபாயில் துவங்கப்பட்ட துணைமின் நிலையம், அடுத்த பத்தாண்டுகளில் 210 கோடி ரூபாய் லாபம் எடுத்துள்ளது. கரும்பு கழிவுப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் காகிதம், உரம், எத்தனால் விற்பனை மூலமாகக் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கிறது. ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுத்த கரும்பு பணம் தர மனம் வரவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவது போல், ஆரூரான் ஆலையையும் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை கொடுக்கும் வரையிலாவது இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.” என்றார். 

திரு ஆரூரான்

கடலூரில் உள்ள பெண்ணாடம் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்காக நீண்டகாலமாகப் போராட்டங்கள் நடத்தி வரும் முன்னோடி கரும்பு விவசாயி கோதண்டராமன் ‘இந்தச் சர்க்கரை ஆலை இங்குள்ள விவசாயிகளுக்கு 60 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது. தற்பொழுது குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதன் மூலமாக 9 ஆயிரம் டன் சர்க்கரை கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை விற்பனை செய்தால் விவசாயிகளுக்குக் 25 கோடி ரூபாய் பணம் கொடுக்கலாம். இங்குள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் திட்டமிட்டே விவசாயிகளை ஏமாற்றுவது ஒருபுறமிருந்ததாலும், மத்திய அரசின் திறமையற்ற செயல்பாடுகளால் சர்க்கரை ஆலைகள் கடுமையான நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சர்க்கரை உற்பத்தி அபரிமிதமாக அதிகரித்ததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 203 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. அப்பொழுது ஒரு டன் சர்க்கரையின் விலை 3700 ரூபாய் ஆக இருந்தது. இந்த ஆண்டு 315 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் ஒரு டன் சர்க்கரையின் விலை 2700 ரூபாய்க்கும் கீழாக குறைந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் சர்க்கரை ஆலைகள் கடும் நஷ்டத்தைச் சந்திக்கும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிட்டு, தேவைக்கேற்ப சர்க்கரை உற்பத்தியைக் குறைக்க வேண்டும். விலை வீழ்ச்சியை ஈடுகட்ட, இதற்கு ஏற்ப உற்பத்தி வரி விதித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விவசாயிகளுக்குக் தர வேண்டும். இனிவரும் காலங்களில் சர்க்கரை உற்பத்தியை குறைத்துக் கொண்டு எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்