'தாய் பெயரில் முதியோர் இல்லம்!’ - பாசக்கார திருடனின் பகீர் வாக்குமூலம்

தாயின் பெயரில் முதியோர் இல்லம் தொடங்குவதற்காகத் திருடியதாகப் பாசக்காரத் திருடன், போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பவுடர் சேகர்

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர் என்கிற பவுடர் சேகர். பிரபல திருடன். இவர் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்ததால் இவரது பெயர் அண்ணாநகர் போலீஸ் பதிவேட்டில் பவுடர் சேகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவர் மீது அமைந்தகரை, அரும்பாக்கம், நொளம்பூர், முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15 க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருந்தி வாழப்போவதாக போலீஸாரிடம் தெரிவித்தார். பிறகு எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையம் தொடங்கினார். போலீஸார் பாராட்டும் வகையில் சமூக சேவை செய்தார். போதைக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களை தனது மறுவாழ்வு மையத்துக்கு அழைத்து வந்து இலவச சிகிச்சையளித்து வந்தார்.

இந்நிலையில் சென்னை நொளம்பூர், முகப்பேர் பகுதிகளில் பூட்டிக்கிடந்த வீடுகளில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. இது குறித்து நொளம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அண்ணாநகர் துணைக் கமிஷனர் சுதாகர், திருமங்கலம் உதவிக் கமிஷனர் காமில்பாட்சா மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். திருட்டு நடந்த வீடுகளில் கிடைத்த கைரேகைகளைப் பதிவு செய்து ஆய்வு செய்தபோது திருடன் பவுடர் சேகரின் உடையது என போலீஸார் கண்டுபிடித்தனர். நல்லவர் போல நடித்த பவுடர் சேகரிடம், போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் திருந்தி வாழ்வதாகவும், நொளம்பூர் பகுதிகளில் நடந்த திருட்டுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என முதலில் தெரிவித்தார். தொடர்ந்து போலீஸார் தங்களுக்குரிய  பாணியில் விசாரணையை மேற்கொண்டபோது சேகர், நொளம்பூர் பகுதியில் பூட்டை உடைத்து வீடுகளில் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரது வீட்டிலிருந்து 50 சவரன்  நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றை நொளம்பூர் பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டில் கொள்ளையடித்ததாக சேகர் வாக்குமூலம் அளித்தார். மேலும், ''எனது தாயின் பெயரில் திருவள்ளூரில் முதியோர் இல்லம் தொடங்க பணம் தேவைப்பட்டதால், மீண்டும் கொள்ளையடித்தேன்’ என சேகர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளான். அதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சேகரைக் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!