வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (02/05/2018)

கடைசி தொடர்பு:23:00 (02/05/2018)

மாணவன் தினேஷ் தற்கொலை தனிநபர் தியாகம்: தமிழிசை உருக்கம்!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த மாணவன் தினேஷின் கோரிக்கையை ஏற்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ஜ.க மாநிலத் தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த மாணவன் தினேஷின் கோரிக்கையை ஏற்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ஜ.க மாநிலத் தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். 

தமிழிசை சவுந்தர்ராஜன்

தந்தையின் மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாத மன அழுத்தம் காரணமாக நெல்லையைச் சேர்ந்த மாணவரான தினேஷ் நல்லசிவன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என்பதற்காக மாணவர் தினேஷ் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார். 

தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து அவர் தனது உயிரை மாய்த்துள்ளார். இது ஒரு உச்சகட்ட போராட்டம். தனி மனிதப் போராட்டம். தியாகப் போராட்டம். இந்தப் போராட்டத்தில் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காரணம், தற்கொலை என்பது எதற்கும்  தீர்வாகாது. 

நிச்சயமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும். அதற்காக நாங்களும் போராடி வருகிறோம். தமிழகத்தில் உள்ள குடிகாரர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக தினேஷ் உயிரை மாய்த்துள்ளார். இது அவரது குடும்பத்தில் உள்ள பிரச்னை மட்டும் அல்ல. குடிகாரர்கள் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்னை. அதற்காக உயிரிழந்த தினேஷுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்துள்ளேன். 

அவரது கடிதத்தில், மதுவிலக்கு தொடர்பாக பிரதமருக்குக் கோரிக்கை வைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். மதுவிலக்கு என்பது மாநிலத்தின் பிரச்னை. அதனால் மாநில அரசுதான் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். அவர் சின்னப் பையன். அந்தத் தம்பிக்கு அது தெரியாததால் பிரதமரின் பெயரையும் எழுதி இருக்கிறார் என நினைக்கிறேன். இதனை அரசியலாகப் பார்க்காமல், ஏழைத் தம்பி உயிரிழந்திருப்பது, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான ஆரம்பமாக இருக்க வேண்டும். தமிழக அரசு இதைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது. 

கர்நாடகாவில் பா.ஜ.க வெற்றி பெறும். அங்கு பா.ஜ.க வெற்றி பெறுவதன் மூலமாகத் தமிழகத்துக்கும் பலன் கிடைக்கும். கர்நாடகாவில் மோடி பிரசாரத்திற்கு பலன் இல்லை என்பது போன்ற தோற்றத்தை எற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நேற்றுகூட அவருடைய பிரசாரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூடியிருக்கிறார்கள். காவிரி பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காங்கிரஸும் தி.மு.க-வும்தான் காரணம்’’ என்று தெரிவித்தார்.