'டெல்டா மாவட்டங்களில் 10-ம் தேதி முதல் பரப்புரை!’ - பேராசிரியர் ஜெயராமன் அறிவிப்பு | Prof. Jayaraman to organise rally in delta districts

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (02/05/2018)

கடைசி தொடர்பு:07:08 (03/05/2018)

'டெல்டா மாவட்டங்களில் 10-ம் தேதி முதல் பரப்புரை!’ - பேராசிரியர் ஜெயராமன் அறிவிப்பு

எரிவாயு எண்ணெய்க் கிணறு அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து காவிரி டெல்டா பகுதிகளில் வரும் 10-ம் தேதி பரப்புரை மேற்கொள்ளப்படும் எனப் பேராசிரியர் ஜெயராமன் அறிவித்துள்ளார்.

எரிவாயு எண்ணெய்க் கிணறு அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து காவிரி டெல்டா பகுதிகளில் வரும் 10-ம் தேதி பரப்புரை மேற்கொள்ளப்படும் எனப் பேராசிரியர் ஜெயராமன் அறிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜெயராமன்

திருவாரூர் அருகேயுள்ள கடம்பங்குடியில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணிக்கு எதிராகக் கடந்த பிப்ரவரி மாதம் மக்களைத் திரட்டி பிரசாரம் செய்தற்காக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் ஆஜரான பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பேராசிரியர் ஜெயராமன், 'வழக்கு விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல 22 வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. மேலும், பல வழக்குகளையும் போலீஸார் என் மீது பதிந்து வைத்திருக்கின்றனர். 

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி பெறாமலேயே எண்ணெய், எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை நடத்தி முடிப்பதற்காகவே மத்திய அரசு, துணை ராணுவப்படைகளைக் கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமன்றி சி.ஆர்.பி.எப். படைபிரிவுக்குப் புதிதாக ஆட்களை எடுத்துள்ளனர். தமிழக அரசு இதையெல்லாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். மாநில அரசின் அனுமதியின்றி எப்படித் துணை ராணுவப்படை வருகின்றது என்பதை  விளக்க வேண்டும். இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. 

கடந்த 8.10.2015-ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அரசாணையில், மீத்தேன் திட்டத்துக்குத் தமிழக அரசு அனுமதி தராது என்று கூறியுள்ளதோடு, இதுபோன்ற திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமானால் தமிழக அரசையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், தமிழக அரசை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதாமல் துணை ராணுவப்படையைத் தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது. மீத்தேன் திட்டப் பணிகளை மேற்கொள்ள திரிபுரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து ராட்சத இயந்திரங்களைக் கொண்டு வந்துள்ளனர். இந்தப் பகுதியை ராணுவமயமாக்கும் வகையில் செயல்படுகின்றனர். இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  

தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய அரசு மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரை 24 எண்ணெய்க் கிணறுகளுக்கு அனுமதியளித்துவிட்டது. ஆனால், அமைச்சர் சி.வி. சண்முகம் அது தவறான தகவல் என்று கூறுவது கண்டனத்துக்குரியது. கதிராமங்கலத்தில் மீத்தேன் போராட்டம் தொடங்கி, வரும் மே 19-ம் தேதியுடன், 365 நாள்கள் ஆகின்றன. அன்று, 365-வது நாள் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து காவிரிப் படுகை முழுவதும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 10-ம் தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளோம். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மக்களையும் திரட்டிப் போராட்டங்கள் நடத்தப்படும்’ என்றார்.