வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (03/05/2018)

கடைசி தொடர்பு:07:23 (03/05/2018)

இரவுப் பணியில் இருந்த பெண் காவலருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

நெல்லை மாவட்டத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு வந்த தொலைபேசி அழைப்பால் அதிர்ச்சி அடைந்த அவர் தர்ம சங்கடத்துக்கு உள்ளானார். இது தொடர்பாக அவர் புகார் அளித்ததால் விசாரணை நடந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு வந்த தொலைபேசி அழைப்பால் அதிர்ச்சி அடைந்த அவர் தர்ம சங்கடத்துக்கு உள்ளானார். இதுதொடர்பாக அவர் புகார் அளித்ததால் விசாரணை நடந்து வருகிறது. 

பெண் காவலர் -தொலைபேசி அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் காவல் நிலையத்தில் இரவுப் பணியில் பெண் காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி இரவுப் பணியில் இருந்துள்ளார். அப்போது காவல்நிலைய தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியதும், எதிர் முனையில் பேசிய ஆண்குரல் எடுத்த எடுப்பிலேயே, ’ஸ்டேஷனில் தனியாகவா இருக்கிறாய்? நான் வேண்டுமானால் துணைக்கு வரட்டுமா?’ என பேசத் தொடங்கி இருக்கிறார். 

அதைத் தொடர்ந்து அந்த பெண் காவலர் போன் இணைப்பைத் துண்டித்துள்ளார். ஆனாலும், மீண்டும் அழைத்த அந்த நபர், தொடர்ந்து நாக்கூசும் வார்த்தைகளைப் பேசியுள்ளார். போன் இணைப்பைத் துண்டித்த போதிலும் தொடர்ந்து, அவரிடம் பேசிய அந்த நபர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார். இதேபோல, அடுத்த சில தினங்களிலும் காவல் நிலைய எண்ணில் அவரை அழைத்து அதே நபர் பேசி உள்ளார்.

அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான பெண் காவலர், இதுகுறித்து முறைப்படி புகார் அளித்தார். அதனை விசாரித்த ராதாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமார், அந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்தார். அத்துடன், அந்த எண்ணுக்குச் சொந்தமான நபரையும் அவர் கண்டுபிடித்தார். அந்த நபர், ராதாபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் ராணுவத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. 

தற்போது ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வரும் அந்த ராணுவ வீரர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் ராதாபுரம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவ வீரர் ஒருவரே தொலைபேசியில் பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசிய விவகாரம் பொதுமக்களிடம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.