வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (03/05/2018)

கடைசி தொடர்பு:07:28 (03/05/2018)

'மாணவனைப் பலி வாங்கிய மது!’ - வைகோ வேதனை

மதுவுக்கு எதிராக நெல்லை மாணவர் தினேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். 

வைகோ

 

சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த வைகோ திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,“திருநெல்வேலியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை கேள்விப்பட்டதில் இருந்து மிகவும் வருத்தமடைந்தேன். இனிமேலும் கொடிய மதுவால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்கிற நோக்கத்தில் அவன் தற்கொலை செய்துள்ளான். தற்கொலை செய்வது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடியது. எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் வாழ்ந்து போராட வேண்டும். மாணவர் தினேஷ். டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராடியிருக்கலாம்.

டாஸ்மாக் கடைகளால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்த கொடூர மதுவால் சிறுமிகளைக்கூட நாசமாக்கி விடுகின்றனர். தந்தை குடித்துவிட்டு மீதி வைக்கும் மதுவை சிறுவர்கள், மாணவர்கள் எடுத்து குடிக்கும் அவலம் தொடர்கிறது. இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கு மாணவர்கள் மது குடித்து விட்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் மதுவை எதிர்த்து நான் மேற்கொண்ட மராத்தானில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். 5 சதவிகித மாணவர்கள் மட்டுமே மது குடிக்கின்றனர். மீதி 95 சதவிகிதம் பேர் குடிப்பதில்லை. தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் குடிக்காதவர்களையும் குடிக்க வைப்பதாக உள்ளது. மாணவன் தினேஷ் தற்கொலைக்குப் பிறகாவது இந்த டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். எனது தாய் மாரியம்மாள் 100 வயதிலும் மதுவை எதிர்த்துப் போராடி இறந்தார்.

நீட் தேர்வு என்கிற நாசக்கார திட்டம் ஏழை, எளிய , கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவை சிதைத்துள்ளது. இந்நிலையில், இந்தவருடம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்கள் கேரளா, ராஜஸ்தான் என வெளிமாநிலங்களில் அமைத்துள்ளனர். ஏழை மாணவர்கள் எப்படி வெளி மாநிலங்களுக்குச் சென்று தங்கி படிக்க முடியும். அதனால் தமிழகத்தில்தான் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் கல்வி அதிகாரி, எங்களுக்கு நீதிமன்ற உத்தரவு இன்னும் வரவில்லை என்கிறார். நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம் என்கிறார். உயர்நீதிமன்ற உத்தரவையே மதிக்காத வகையில் மத்திய அரசின் கல்வித்துறை உள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே, அவர் நீட் தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க