'கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை'- அதிர்ந்த பெண் அதிகாரி; கொந்தளித்த பெண்கள்!

மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி செயலாளர் மட்டுமே கலந்துகொண்டார். கிராம சபை கூட்டம் நடத்துவது பற்றி ஊர் மக்களுக்கு, அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. தண்டோரா மூலமாகவும் அறிவிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தக் கிராம சபையில் வி.ஏ.ஓ. கூடப் பங்கேற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அதிகாரிகள் வரும்வரை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். பின்னர் கலை 11.00 மணிக்கு வர வேண்டிய அதிகாரிகள், கால தாமதமாக மதியம் 1.00 மணிக்கு வந்தனர். 

மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வந்த, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியிடம், 'அதிகாரி ஆகிய நீங்களே இவ்வளவு லேட்டா வந்த என்ன அர்த்தம். நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டாமா? எங்கள் ஊருக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. தண்ணீர் ஒழுங்காக வரவில்லை. தெருவிளக்கு எரியவில்லை. இப்படி அடிப்படை வசதியே எங்கள் ஊரில் இல்லை. இதை உங்களிடம் கூறிவிட்டு வேலைக்குச் செல்லலாம் என்று காத்துக்கொண்டு இருக்கிறோம். நீங்க இவ்வளவு லேட்டா வர்றீங்களே மேடம்' என்று  தாமதம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அதிகாரி சாந்தி,  ''உங்கள் ஊர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. போனா போவட்டும் என்று இங்கு வந்தால் நீங்கள் ரொம்ப ஓவரா பேசுறீங்க. அப்பறம் எந்த வசதியும் உங்க ஊருக்கு கிடைக்காது" எனக் கோபமாக பேசினார். இதனால் அங்குக் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் வரை கூட்டத்தை நடத்தக் கூடாது எனவும், வட்டார வளர்ச்சி அலுவலர் வரவில்லை என்றால் கூட்டத்தை மறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் சிலர், கிராம மக்கள் எழுதிய தீர்மானத்தை மாற்றி எழுத முயன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையில், அதிகாரிகளுக்குத் துணையாக விண்ணமங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் குடிநீர் வழங்கும் ஆப்பரேட்டர், இனி உங்க ஊருக்கு தண்ணீர் விடமாட்டேன். எங்க அதிகாரிங்களையே எதிர்த்துப் பேசுறீங்களா?." என்று பேசினார். இதில் ஆத்திரமடைந்த, கிராம மக்கள் ஊர் கிராம அலுவலர்கூட இல்லாமல் கிராம சபை நடத்தினால் எங்கள் குறைகள் எப்படி உங்களுக்குத் தெரியும் என கேள்வி எழுப்பி கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்தனர். ஆனால், அதிகாரிகள் கிராம சபை நடத்துவது போன்று அமர்ந்து போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!