'பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..!' - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

 

எடப்பாடி பழனிசாமி

''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் கூறினார். மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி வரை ஓர் ஆண்டு காலம் நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடவும், பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தத் திட்டங்கள் என்னென்ன என்று முடிவு  எடுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குழு பரிந்துரைக்கும் திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து நிறைவேற்றும். இக்குழுவில் முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், தேவேகவுடா, மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற சபாநாயகர், மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று மொத்தம் 114 பேர் இடம்பெற்று இருக்கிறார்கள். இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் இன்று நடந்தது. பிரதமர் மோடி கலந்துகொண்டார். தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். 

அதன்பின்னர், டெல்லியில் நிருபர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ''கூட்டத்தில் தேவையான ஆலோசனைகளை தமிழகத்தின் சார்பில் வைத்துள்ளோம். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தை ரூ.500 கோடி செலவில் தரம் உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். பொங்கல் போலவே, காந்தி ஜெயந்தி தினத்தன்று இலவச வேட்டி, சேலை வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். அதாவது, மானிய விலையில் அம்மா இரண்டு சக்கர வாகனம் திட்டத்தை பிரதமர் மோடி சென்னையில் தொடக்கி வைத்த விழாவில் மேடையிலேயே காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கோரிக்கையை வலியுறுத்திப் பேசினேன்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ராணுவ தளவாட கண்காட்சி விழாவுக்கு வந்த பிரதமரிடம் நானும், துணை முதல்வரும் கோரிக்கை மனு கொடுத்தோம். அனைத்துக் கட்சிகள், விவசாயிகள் சார்பில் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தோம். அந்தக் கோரிக்கை மனு குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை பதில் வரவில்லை. காவிரி விவகாரத்தில், நான் பிரதமரை தனியாக சந்திப்பது நன்றாக இருக்காது. காவிரி பிரச்னை குறித்து சந்திக்க நேரம் ஒதுக்கித்தர வேண்டும் என பிரதமரிடம் ஏற்கெனவே கேட்டுள்ளோம். காவிரி நீரை தமிழக விவசாயிகளுக்குப் பெற்றுத்தர தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது'' என்று கூறினார். 

இன்று மதியம், டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  ''உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்புக் கிடைத்தால் பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்துவேன். இதுதொடர்பாக வேறு யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை’ என்று தெரிவித்தார். காவிரி தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்  மே 3-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!