சசிகலாவை சந்திக்கும் டி.டி.வி.தினகரன் - மே 5-ம் தேதி அதிரடி அறிவிப்பு வருகிறது!

தினகரன்


வாழும் வரை கட்சியை இரும்புக்கோட்டையாக  வைத்திருந்தார், ஜெயலலிதா. அவர் மறைந்த பின்னர், சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக நியமித்தது. அதன் பின்னர், சசிகலா ஓ.பன்னீர்செல்வம் மோதல் வெடித்ததால், 'தர்மயுத்தம்' தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். ஆனாலும், பெங்களூரு ஜெயிலுக்குப் போகும்வரை  ஒட்டுமொத்த கட்சியையும் ஆட்சி நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார்  சசிகலா. அதோடு, மன்னார்குடி குடும்பத்தினரும் சசிகலாவின்  கண் அசைவுகளுக்கு ஏற்ப அடங்கி ஒடுங்கி இருந்தனர்.  இப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது, சசிகலாவின் சகோதரர் திவாகரனும் அவரது மகன் ஜெய் ஆனந்தும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 'அம்மா அணி' என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துவிட்டார் திவாகரன். இனிமேல், டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்பட முடியாது என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் திவாகரன். பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்க இருந்த திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, 'தொண்டர் தரிசனம்' என்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத் திட்டத்தை வகுத்துவருகிறார் திவாகரன். இந்நிலையில் டி.டி.வி.தினகரன், வரும் 5-ம் தேதி பெங்களூரு செல்கிறார். அப்போது, அவர் ஜெயிலில் சசிகலாவை சந்தித்துப் பேசுகிறார். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத்  தீர்க்கும் வகையிலும் தொண்டர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல் வழங்கும் வகையிலும், அன்றைய தினம் சசிகலா சார்பில் ஓர் அறிக்கை வெளியிட ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அத்தகைய அறிவிப்பை கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!