வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (03/05/2018)

கடைசி தொடர்பு:08:53 (03/05/2018)

காவிரியை எதிர்நோக்கும் தமிழகம் - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்றம்

காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே கடும் பிரச்னை நிலவிவருகிறது. காவிரி விவகாரத்தில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தமிழகத்துக்கு 177.24 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் மற்றும் 6 வாரங்களுக்குள் ‘ஸ்கீம்’ அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவு வழங்கியிருந்தது. 

ஆறு வார கால அவகாசம் முடிவடைந்தும் வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை. அவகாசம் முடிவடைய சில தினங்களே இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பில் இருந்த ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையின் விளக்கம் கேட்டும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல் திட்டத்தை அமல்படுத்த மேலும் கால அவகாசம் கேட்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.  

காலம் கடந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகத்தில் கடந்த மாதம் பல போராட்டங்கள் நடைபெற்றன. கடையடைப்பு, சாலை மறியல், உண்ணாவிரதம், பேரணி எனப் பல வகைகளில் போராட்டங்கள் நடைபெற்று ஓய்ந்தன. தமிழகத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளும் தடை செய்யப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. வரும் மே 12-ம் தேதி, கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைக் கருத்தில்கொண்டே தமிழகத்துக்கு வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசுமீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. மத்திய அரசு தொடர்ந்த வழக்கையும், தமிழக அரசின் மனுவும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, கடந்த மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மே 3-ம் தேதி காவிரி வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கியது . மேலும்  ‘ஸ்கீம் ‘ பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என வழக்கை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு. 

இதையடுத்து, வரைவுத் திட்டத்தைத் தாக்கல்செய்ய மேலும் 2 வார கால அவகாசம் கேட்டு இடைக்கால மனுத்தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. இதை ஏற்காத உச்ச நீதிமன்றம், ‘எதுவானாலும், மே 3-ம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் தெரிவிக்குமாறு கூறி இடைக்கால மனுவை நிராகரிப்புச்செய்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற இருப்பதால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி தமிழக விவசாயிகள், மக்கள் என அனைவரும் காத்திருக்கிறார்கள்.