"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்!" - கொடிவேரியில் குவியும் கூட்டம்

தண்ணீர்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க!

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில்கூட பேட்ஸ்மேன்கள் இந்தளவுக்கு ஆக்ரோஷமான சதங்களை அடித்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கோடைக்காலம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலை அள்ளி வீசுகிறது. வெயிலுக்குப் பயந்து பலர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஒருசிலர் வெயிலின் கொடுமை தாங்காமல் ஊட்டி, கொடைக்கானல் எனக் குளிர் பிரதேசங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர். அப்படிச் செல்பவர்கள் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையான கொடிவேரியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.

தண்ணீர்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கொடிவேரி. கொடிவேரி பிரிவு சாலையில் இறங்கி 2 கி.மீ காலார நடந்தால், சில்லென்ற சாரல் காற்றுடன் கொடிவேரி உங்களை வரவேற்கும். (என்கிட்டதான் கார் இருக்கே! நான் ஏன் நடக்கணும் எனக் கேட்பவர்கள்... காருக்கு டோக்கன் பாஸ் போட்டுவிட்டு நேராகக் கொடிவேரியில் நீங்கள் இறங்கலாம்). கொடிவேரி அணைக்குள் நுழைய ஆள் ஒருவருக்கு 5 ரூபாய்தான் நுழைவுக் கட்டணம்.

தண்ணீர்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க!

நிற்க!.. இந்த இடத்தில் கொடிவேரி அணைக்கட்டின் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். கொடிவேரி அணைக்கட்டு காவிரி ஆற்றின் உபநதியான பவானி ஆற்றின் குறுக்கே, பவானிசாகர் அணைக்கு கீழ்ப்புறம் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை மைசூர் மன்னர்களால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையின் மொத்த நீளம் 151 மீட்டர். 

இந்த அணையின் இடதுபுறம் அரக்கன்கோட்டை கால்வாயும் வலது புறத்தில் தடப்பள்ளி கால்வாயும் அமைந்துள்ளன. இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் சுமார் 25,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வருடம் 365 நாள்களும் இந்த அணைக்கட்டின் வழியாகத் தண்ணீர் திறக்கப்பட்டு, அது குடிநீருக்காகவும் விவசாய நிலங்களுக்கும் செல்கிறது. எனவே, எப்போது வந்தாலும் கொடிவேரியில் ஜாலியாக ஒரு குளியல் போடலாம்.   

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீர் சுமார் 20 அடி உயரத்திலிருந்து பொத்தென கீழே விழுவதன் மூலம் ஓர் அழகான நீர் வீழ்ச்சியாக உருவாகிறது. பார்ப்பதற்கு ஒரு சிறிய அருவிபோல் இருந்தாலும், குளிர்ச்சியாய் தலையில் அது கொட்டும்போது சொர்க்கம்தான். தற்போது விவசாயத்துக்காகப் பவானிசாகர் அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் தண்ணீர் கொட்டோ கொட்டென கொட்டுகிறது. மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகியுள்ளன. 

தண்ணீர்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க!

நன்றாகக் குளியல் போட்டு வந்ததும், சாப்பிடுவதற்கு சுடச்சுட வறுத்த மீன் ரெடியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், சுடு சோற்றில் குழி வெட்டி, அதில் மீன் குழம்பை ஊற்றித் தருகிறார்கள். அணையிலிருந்து கொட்டும் நீரைப் பார்த்தபடியே மீன் குழம்புச் சாப்பாட்டை சாப்பிடும்போது ஆகா... பரம ஆனந்தம். சுமார் 25-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் கொடிவேரியில் இருக்கின்றன. பக்கத்திலிருக்கும் பவானிசாகர் அணையிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள்தான் என்றாலும், உஷாராக இருக்க வேண்டும். ஒருசில கடைகளில் கெட்டுப்போன மீன்கள்தான் சுடச்சுட பறிமாறப்படுகின்றன. மேலும், மாங்காய், நிலக்கடலை, வெள்ளரிக்காய், இலந்தை வடை எனப் சாப்பிடுவதற்கு எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன. 

குழந்தைகள் விளையாடுவதற்காகப் பூங்கா, பரிசல் சவாரி எனக் கொடிவேரி ஒரு பக்காவான சுற்றுலாத்தலமாக இருக்கிறது. ஆனால், கொடிவேரியில் தங்குவதற்கான வசதிகள் ஏதும் இல்லை. வந்தால் குளித்து, ரசித்துவிட்டுச் செல்லலாம் அவ்வளவுதான்... அந்தவகையில், கொடிவேரி ஒருநாள் டூரிஸ்ட் ஸ்பாட்தான். மேலும், கொடிவேரியில் மீன் கடைகளைத் தவிர்த்து சாப்பாட்டுக் கடைகள் என்று எதுவும் இல்லை. எனவே, முன்னெச்சரிக்கையாக வீட்டிலிருந்து சாப்பாடு கட்டி எடுத்துவருவது நல்லது. இல்லையென்றால், சாப்பாட்டுக்கு 20 கி.மீ பயணித்து கோபிசெட்டிபாளையமோ சத்தியமங்கலமோதான் செல்ல வேண்டும்.

எனக்கு எதுவும் தேவையில்லை. அடிக்குற வெயிலை சமாளிக்க சில்லுனு தண்ணியில விழுந்து கிடந்தாபோதும் என நினைப்பவர்கள், உடனே கொடிவேரிக்கு கிளம்பலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!