வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (03/05/2018)

கடைசி தொடர்பு:09:50 (03/05/2018)

பொறியியல் கலந்தாய்வு - இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வுக்கு, இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில், மொத்தம் உள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் காலி இடங்களில், 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது.

கடந்த வருடம் வரை பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த பிறகு, அதற்கான அழைப்புக் கடிதம் வரும். பின்னர், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும். மாணவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, நேரில் சென்று தங்களது சான்றிதழ்களைச் சமர்ப்பித்து நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு, அதன்பிறகே கல்லூரியில் இடம் வழங்கப்படும். ஆனால், இந்த வருடம் முதல் கலந்தாய்வு ஆன்லைன்மூலம் நடைபெற உள்ளது. இன்று முதல் மே 30-ம் தேதி வரை www.annauniv.edu/tnea2018 என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணைய வசதி இல்லாத தமிழகத்தின் பல இடங்களில், இதற்கான உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  

இதையடுத்து, ஜூலை மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கி, நடைபெற உள்ளது. மாணவர்கள், வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழகத்தில் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.