'தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் வழங்கவும்; மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்' - கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

உச்சநீதிமன்றம்

மே மாதத்துக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஆணையை மீறும்பட்சத்தில், கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நீர்ப் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், காவிரி வழக்கில் வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வரைவுத் திட்டம் தயாராக இருக்கிறது. அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியிருக்கிறது. பிரதமர் கர்நாடகாவில் பிரசாரம் செய்வதால், திட்டத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறமுடியவில்லை. வாரியத்துக்கான செயற்பாட்டு வரைவு அறிக்கை பிரதமருக்கு அனுப்பப்பட வேண்டியுள்ளது. இதனால் வரைவுத் திட்டத்தைத் தாக்கல்செய்ய 10 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும்" என்று கூறினார். 

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகள், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இத்தனை நாள்களாக எந்தத் திட்டத்தையும் இறுதிசெய்யாத மத்திய அரசு, '10 நாள்களில் செயல்திட்டத்தைத் தாக்கல்செய்வோம்' என்பதை எப்படி நம்ப முடியும்? என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து நீதிபதிகள், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவது பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்றனர். இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறினார்.

இதையடுத்து கோபம் அடைந்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது. தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும். இந்த உத்தரவை மீறினால், கர்நாடக அரசு கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், தமிழகத்துக்கு இடைக்காலமாக 4 டிஎம்சி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, காவிரி விவகாரத்தில் இதுவரை எடுத்த நடவடிக்கை பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!