வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (03/05/2018)

கடைசி தொடர்பு:13:18 (03/05/2018)

'காலாவதி தேதியா என பார்த்து வாங்குங்கள்'- மக்களுக்கு கலெக்டரின் கோடைக்கால அறிவுரை

பழக்கடை

"பழக்கடை மற்றும் குளிர்பான கடைகள் நடத்துபவர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டும்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  "தற்பொழுது கோடைக்காலம் ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் குளிர்பானங்கள், பழ வகைகள் அதிகம் பயன்படுத்துவார்கள். எனவே, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் சாலையோர பழச்சாறுக் கடைகள் மற்றும் குளிர்பானக் கடைகள் நடத்துபவர்கள் சுத்தம் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும். மேலும், கோடை காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வாங்கும் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை காலாவதி தேதி பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஆதலால், பேக்கரி, டீக்கடைகள், குளிர்பான நிலையங்கள் மற்றும் பழ ஜுஸ் கடைகளை நடத்தி வருபவர்கள் பொதுமக்களுக்கு தரமான, காலாவதி ஆகாத, பயன்படுத்த உகந்த உணவுப் பொருள்களை உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து, கரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்குப் போதிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தரமான மற்றும் பயன்பாட்டுக்கு உகந்த குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதற்கு ஏதுவாக கரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரி, டீக் கடைகள், குளிர்பான நிலையங்கள் மற்றும் பழஜுஸ் கடைகளை ஆய்வு மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், குளிர்பானங்களுக்குப் பயன்படுத்தும் ஐஸ் வகைகள் சுத்தமானது மற்றும் தரமானதாகவும், பொதுமக்கள் குடிப்பதற்கு உகந்த தண்ணீர் கொண்டும் தயாரிக்க வேண்டும். பேக்கரி, டீக்கடைகள், குளிர்பான நிலையங்கள் மற்றும் பழஜுஸ் கடைகள் நடத்துபவர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு உரிமம் / பதிவு கட்டாயம் பெற்று, தங்களது கடையில் வைத்திருத்தல் வேண்டும்.

மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வின்போது உரிமம் / பதிவு தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். தவறுபவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன்கீழ் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சந்தேகப்படும்படியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்தால், உடனே, உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் எண் 94440 42322 என்ற இந்த எண்ணுக்குப் புகார் தெரிவிக்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறு செய்பவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்" என்றார்.