வனத்துக்குள் குளுமை... இதமான குளியல்... கும்பக்கரைக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

என்னதான் இயற்கையான சூழலாக இருந்தாலும் மனித நடமாட்டத்தால் அங்கங்கே கிடக்கும் குப்பைகளும்,பிளாஸ்டிக் பொருட்களும் இயற்கை சூழலை அசுத்தப்படுத்துகின்றன

கோடைக் காலத்தோடு விடுமுறையும் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கத்தால் ஏதேனும் நீர்நிலைதான் நமது சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும். அந்த வகையில், குறைந்த பட்ஜெட்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவி விளங்குகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உண்டாகும் காட்டாற்றினால் உருவாகியது, கும்பக்கரை அருவி. காட்டாறு என்பதால், எப்போதும் வேகமான நீரோட்டத்துடனே காணப்படும். தற்போது, கோடையில் காட்டாற்று வெள்ளம் குறைந்ததை அடுத்து, கும்பக்கரையில் குளிக்க விதித்திருந்த தடையை சென்ற வாரம் வனத்துறையினர் நீக்கினர். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் வரவு பெருமளவு அதிகரித்திருக்கிறது.

குளக்கரை

அருவியைப் பற்றி சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், "கடுமையான மதிய வெயிலில் கிளம்பினோம். அருவி இருக்கும் வனப்பகுதிக்குள் நுழைந்த உடனே குளுமை சூழ்ந்தது. இயற்கையான நீரோட்டத்தில், குளியல் இதமாக இருந்தது. ஆழம் இல்லாததால் குழந்தைகளும் பெண்களும் விளையாடி மகிழ்ந்தனர். மொத்தத்தில், குடும்பத்தோடு விடுமுறையைக் கொண்டாடிய இதமான அனுபவத்தைத் தருகிறது கும்பக்கரை அருவி" என்று தெரிவித்தார்.

என்னதான் இயற்கையான சூழலாக இருந்தாலும், மனித நடமாட்டத்தால் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளும் பிளாஸ்டிக் பொருள்களும் இயற்கைச் சூழலை அசுத்தப்படுத்துகின்றன. இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, "குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் சாப்பிட்ட தட்டுகளை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். ஷாம்பு மற்றும் சோப்பைப் பயன்படுத்திவிட்டு, அந்த பேப்பர்களையும் ஆங்காங்கே விட்டுச் செல்வது, அருவியின் அழகைக் கொஞ்சம் கொஞ்சமாக நாமே கெடுப்பதாக ஆகிறது. எனவே, அருவிக்கு வரும் பொதுமக்கள், இயற்கையின் தூய்மையைக் காக்க பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குக் கேடு தரும் பொருள்களை உபயோகிப்பதைத் தவிர்க்கலாம்" எனத் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!