கிராம சபையில் அரசுப் பள்ளி ஆசிரியை வைத்த 5 கோரிக்கைகள்! #CelebrateGovtSchool

அரசுப் பள்ளி

நாட்டின் கடைக்கோடி மனிதருக்கும் அதிகாரம் சென்று சேர வேண்டும் எனும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் உள்ளாட்சி அமைப்புகள். தான் வாழும் கிராமத்தில் உள்ள சிக்கல்களைக் கலைவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு இவ்வமைப்பு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, குடிநீர், தெரு சீரமைப்பு உள்ளிட்ட வசதிகள் கிராமத்தில் மேம்பட உள்ளாட்சி நிர்வாகம் பெரிதும் பயன்தரும் விதத்தில் உள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் கருத்துகள் மட்டுமல்லாது, நேரடியாக மக்கள் தங்களின் குறைகளைக் கூறி உரையாடவும் தீர்த்துக்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டதுதான் கிராம சபை. இந்திய குடியரசு நாள் (ஜனவரி 26), உழைப்பாளர் தினம் (மே 1), விடுதலை நாள் (ஆகஸ்ட் 15), காந்தி ஜயந்தி (அக்டோபர் 2) ஆகிய நாள்கள் கிராம சபை கூடுகிறது. இதனை ஊராட்சி மன்றத் தலைவர் நெறிப்படுத்துவார். தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படாவிட்டாலும், ஒவ்வொரு கிராமத்தில் முக்கியமானவர்கள் ஒன்று சேர்ந்து கிராம சபை கூட்டத்தை, அதிகாரிகள் நடத்துகின்றனர். அதுபோல, இந்த ஆண்டு உழைப்பாளர் தினத்தன்று தமிழகத்தில் பல இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. அதுபோன்ற கிராம சபையில் அரசுப் பள்ளி ஆசிரியை தான் பணிபுரியும் பள்ளிக்கு ஐந்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் மாத்தூரில் உள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் மாணவர்கள் படிப்போடு கலை சார்ந்த விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஊரின் கிராம சபை கூடியபோது இந்தப் பள்ளியின் கணித ஆசிரியை யுவராணி அதில் கலந்துகொண்டார்.

govt school

"உழைப்பாளர் தினத்தில் நடந்த எங்கள் கிராம சபை கூட்டத்தில்...

1. எங்கள் பள்ளியின் சுற்றுச் சுவரின் உயரம் குறைவாக இருக்கிறது. இதனால், ஒரு சில மாணவர்கள் சுற்றுச் சுவரைத் தாண்டி வெளியே செல்கின்றனர். சில மாணவர்கள்தான் அப்படிச் செய்கின்றனர் என்றாலும், அவர்களைப் பார்த்து மற்ற மாணவர்களும் பின்பற்றி விடக்கூடாது அல்லவா... அதற்காகப் பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்திக் கட்டித்தர வேண்டும். 

2. தொடக்க, நடுநிலைப் பள்ளி என்றால் மாணவர்கள் சிறுவயதாக இருப்பார்கள். எங்கள் பள்ளி மேல்நிலைப் பள்ளி என்பதால் சற்று பெரிய மாணவர்கள். அவர்களின் உலகம் குழப்பமானது. சில மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து, கடை போன்ற பொதுஇடங்களில் சுற்ற நினைப்பர். இதைத் தடுப்பதற்கு கிராம மக்களின் உதவி அவசியம் வேண்டும். அப்படியான மாணவர்களைப் பார்த்தால், அவர்களிடம் தன்மையாகப் பேசி, பள்ளிக்குத் தகவல் கொடுத்து உதவ வேண்டும்.

yuvarani teacher 3. பள்ளியின் வேலை நாள்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் இருப்பதால், வேறு யாரும் வருவதில்லை. ஆனால், பள்ளி விடுமுறை நாள்களில் சில நபர்கள் பள்ளிக்கு உள்ளே வந்து பொருள்களைச் சேதப்படுத்துவது நடந்துவருகிறது. அவர்களைத் தடுக்கும் முயற்சியைக் கிராம மக்கள் எடுத்தால், பள்ளியின் பொருள்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்படும். இதுபோன்ற நபர்கள் உள்ளே வருவதைத் தடுக்க, சுற்றுச்சுவரில் கண்ணாடித் துண்டுகளைப் பதித்துத் தரலாம். 

4. இது டிஜிட்டல் யுகமாகி விட்டது. எனவே, நம் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம்ஸ் ஏற்படுத்த உதவி செய்ய வேண்டும். இதனால், இந்த ஊர் மாணவர்கள் புதிய விஷயங்களை, புதிய முறையில் கற்றுக்கொள்வார்கள். 

5. அரசுப் பள்ளியில் ஏராளமான சலுகைகளை அரசாங்கம் நமக்காக அளித்துவருகிறது. அதைக் கிராம மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனில் உங்கள் பிள்ளைகளைத் தவறாமல் அரசுப் பள்ளியில் சேருங்கள். இதற்கு, முன் உதாரணமாக என்னையே சொல்வேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறேன்.  

இந்த ஐந்து கோரிக்கைகளை முன் வைத்தேன். சுற்றுச்சுவர் தொடர்பாக, ஜூன் மாதத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியரோடு பேசி அதற்கான பணிகளைச் செய்யலாம் என்றும், அதேபோல, பள்ளி நேரத்தில் வெளியே பார்க்கக்கூடிய மாணவர்கள் பற்றிய தகவல் தருவதாகவும், அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கவும் செய்கிறோம் என்றும் கூறினர். எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் கிராம சபை கூட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்கள், நம் பள்ளிக்கான ஸ்மார்ட் கிளாஸ் ரூம்ஸ் கொண்டுவர நிதி திரட்டி தருகிறோம் எனும் உறுதியளித்தனர். அது எனக்கு ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது" என்றார் ஆசிரியை யுவராணி. 

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் பணிகளைப் பாராட்டுவோம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!