ரத்தம் சொட்டச் சொட்ட விவசாயிகள்! பதற்றமான காவிரி போராட்டக்களம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் இருவர்க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்குத் துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ரயில் நிலையம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரயில் நிலையம் உள்ளே அனுமதிக்காததால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரும்புக் கேட்டை ஏறிக் குதித்து உள்ளே செல்ல முயன்ற இருவருக்கு இரும்புக் கம்பி குத்தி காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் ரயில் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் ரயில் நிலையம் உள்ளே செல்ல முடியாதபடி போலீஸார் பேரிகேட் தடுப்பு அமைத்து பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், டெல்டா பகுதியைப் பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், காவிரி நீர் தர மறுக்கும் அரசுகள் அகற்றப்படும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறே ரயில் நிலைய முகப்புக்கு வந்தனர் போராட்டகாரர்கள். அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர் போலீஸார். அப்போது இரு தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றதால் பெரும் பதற்றம் உருவானது. ஒரு சிலர் பக்கவாட்டில் இருந்த இரும்புக் கேட்டின்மீது  ஏறிக் குதித்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அந்தக் கேட்டில் இருந்த கூர்மையான  இரும்புக் கம்பி காலில் குத்தி பலமாகக் கிழித்தது.

இதில் இருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. அவர்களைப் போலீஸார் முற்றுகைப் போராட்டம்தான் நடக்குது எதற்கு கேட் ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்றீர்கள் எனக் கேட்டனர். பிறகு,  தண்ணீர் கொடுத்து காலை கழுவ வைத்த காவல்துறையினர் சிகிச்சைக்காக அவர்களை அழைத்துச் செல்லவில்லை. அப்போதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க காயம்பட்டவர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் 20 நிமிடங்களுக்கும் மேலாக ரத்தம் சொட்ட அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தனர். பின்னர், போராட்டக் குழுவை சேர்ந்தவர்கள் காயம்பட்ட இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதுமே பதற்றத்துடன் இருந்தது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!