’பிரதமர், முதல்வர் மதுக்கடைகளை ஒழிப்பீர்களா?’ தற்கொலை செய்த தினேஷின் உருக்கமான கடிதம் #BanTASMAC

தனது தந்தையின் மதுப்பழக்கத்தைத் தடுக்க முடியாத மன அழுத்தம் காரணமாக நெல்லையைச் சேர்ந்த மாணவன், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. தற்கொலைக்கு முன்பாக எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.

’பிரதமர், முதல்வர் மதுக்கடைகளை ஒழிப்பீர்களா?’  தற்கொலை செய்த தினேஷின்  உருக்கமான கடிதம் #BanTASMAC

தன்னுடைய தந்தையின் மதுப்பழக்கத்தைத் தடுக்க முடியாத, மன அழுத்தம் காரணமாக நெல்லையைச் சேர்ந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அந்த மாணவன் எழுதிவைத்திருந்த கடிதத்தில், “இதன்பிறகாவது தமிழகத்தில் மதுக்கடைகளை அடைக்கிறார்களா எனப் பார்ப்போம். இல்லையென்றால், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி பாப்பா என்ற இசக்கியம்மாள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்துவிட்டார். அதனால் மாடசாமி, குருவம்மாள் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

மதுமான கடை, டாஸ்மாக்

மாடசாமிக்கு முதல் மனைவி மூலமாகப் பிறந்த தினேஷ் நல்லசிவன், இசக்கிராஜ், தனுசியாஸ்ரீ ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், தினேஷ் நல்லசிவன் நாமக்கல் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்காகத் தயாராகிவந்தார். அவரது தம்பி இசக்கிராஜ் 9-ம் வகுப்பும், தங்கை தனுசியாஸ்ரீ 8-ம் வகுப்பும் படித்துவந்தார்கள். தினேஷ் நல்லசிவன் மற்றும் அவரது தம்பி, தங்கையை மாடசாமியின் தம்பியான மணி என்பவர் படிக்கவைத்து வருகிறார்.

தினேஷின் தந்தை மாடசாமிக்குச் சொந்தமாக நிலங்கள் உள்ளன. ஆனால், விவசாயம் செய்யாமல் பிறரிடம் கடன் வாங்கிக் குடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். கூட்டுறவுச் சங்கத்தில் கடன் வாங்குவது, உள்ளூரில் உள்ள கந்துவட்டிக் கும்பலிடம் கடன்பெறுவது என ஊதாரித்தனமாக அவர் செலவு செய்து வந்துள்ளார். அவர் பெற்ற கடன் தொகையை, தம்பி மணி அல்லது உறவினர்கள் திருப்பிச் செலுத்தி வந்துள்ளனர்.

அத்துடன், குடித்துவிட்டு ஆங்காங்கே தகராறு செய்வது, குடும்பத்தில் பிரச்னை செய்வது எனச் செயல்பட்டு வந்துள்ளார் தினேஷின் தந்தை. இதனால் உறவினர்கள் அனைவரும் அவர்மீது கோபமடைந்துள்ளனர். கடந்த வாரத்தில் சொந்த ஊருக்குச் சென்ற தினேஷ் நல்லசிவன், தனது தந்தையிடம் குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு பேசியுள்ளார். ஆனால், போதையில் இருந்த மாடசாமி அதைக் கேட்காமல் மகனை அவதூறாகப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இரு தினங்களுக்கு முன்னர் அவர் தனது தம்பி, தங்கைகளை அழைத்துக்கொண்டு கயத்தாறு வந்துள்ளார். அங்குள்ள உறவினர் வீட்டில் மூவரும் தங்கியிருந்துள்ளனர். நீட் தேர்வு வரும் 6-ம் தேதி நடக்க உள்ள நிலையில், அதற்கான தேர்வு மையத்தைப் பார்த்துவிட்டு வருவதாக உறவினர்களிடம் சொல்லிவிட்டு தினேஷ் நல்லசிவன் கடந்த மே 1-ம் தேதி காலையில் நெல்லைக்கு வந்துள்ளார்.

பாளையங்கோட்டையில் உள்ள தேர்வு மையத்தைப் பார்த்துவிட்டு நெல்லையில் இருந்து தந்தையுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போதும், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் மனமுடைந்த தினேஷ், நெல்லை தெற்குப் புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் கயிற்றில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் உயிரிழந்த இடத்தின் எதிரே டாஸ்மாக் கடை இருக்கும் நிலையில், அதற்கு எதிரில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவத்தால் அவரது உறவினர்கள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் பதறியடித்தபடி ஓடிவந்த உறவினர்கள், “மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன் தினேஷ். கடந்த 10-ம் வகுப்புத் தேர்வில் 478 மார்க் எடுத்த அவனை, நாமக்கல் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தோம். அங்கு நன்றாகப் படித்துவந்தான். அந்தப் பள்ளிக்கூடத்தில் அவன் இரண்டாவது ரேங்க் எடுத்து வந்தான். எப்படியும் நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆகிவிட வேண்டும் என்கிற கனவுடன் இருந்தான். இப்படிச் செய்வான் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை’’ என்று சொல்லிக் கதறினார்கள். 

தற்கொலை கடிதம்

தற்கொலை செய்யும் முன்பாக தினேஷ் நல்லசிவன் தனது கைப்பட கடிதம் எழுதி பேக்கில் வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், “அப்பா நான் தினேஷ் எழுதுவது. நான் செத்துப்போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிப்பதால் எனக்குக் கொள்ளிவைக்காதே; மொட்டை போடாதே. ஓபனாகச் சொன்னால், நீ எனக்குக் காரியம் பண்ணாதே. மணி அப்பாதான் பண்ண வேண்டும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும். குடிக்காதே அப்பா.. அப்போதுதான் நான் சாந்தியடைவேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், அதே கடிதத்தில் பிரதமர் மற்றும் முதல்வரைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அதில், “இந்தியாவின் பிரதமர், முதல்வர் அவர்கள், இனிமேலாவது தமிழகத்தில் மதுபானக் கடைகளை அடைக்கிறார்களா எனப் பார்ப்போம். இல்லையென்றால், நான் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’’என்று தனது முழு முகவரியைக் குறிப்பிட்டுள்ளதுடன், அதில் தன்னுடைய உறவினர்களின் செல்போன் எண்களையும் குறிப்பிட்டுள்ளார்.

தினேஷ் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பிரேதப் பரிசோதனையை முடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது உடல், சொந்த ஊரான கே.ரெட்டியபட்டி கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தினேஷின் தந்தை மாடசாமி, கேரளாவுக்கு வேலைக்காகச் சென்றுவிட்டார். அதனால் உறவினர்களே அவரது உடலை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுச் சென்றார்கள். 

தினேஷ் தற்கொலை விவகாரத்தால், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராகப் பொதுமக்களிடம் கோபம் எழுந்துள்ளது. அதனால் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கையைப் பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக நல அமைப்பினரும் எழுப்பியுள்ளனர். ஆனால், அமைச்சர் ஜெயக்குமார், “டாஸ்மாக் மதுக்கடைகளை அடைத்துவிட்டால் கள்ளச் சாராயம் பெருகிவிடும்’’ எனப் பேசியிருப்பது இளைஞர்களிடம் கோபத்தைக் கிளப்பியிருக்கிறது. அதனால், சமூக வலைதளங்களில் அவரது கருத்துக்குக் கண்டனம் குவிந்துவருகிறது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதே தமிழக இளைஞர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

தந்தையின் குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை முடித்துக்கொண்ட பள்ளி மாணவனின் சோகச் சம்பவத்துக்குப் பின்னராவது தமிழக அரசு விழித்துக்கொள்ளுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!