வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (03/05/2018)

கடைசி தொடர்பு:14:30 (03/05/2018)

''அவளுக்கு என்ன விட்டா யாரும் இல்ல!'' - தனிமையும் சீதாலெட்சுமி அம்மாவின் கதையும்

“அப்படியா, பெருமாளே உங்களை இங்க அனுப்பியிருக்காரா? அப்டின்னா வாங்கோ உள்ள வந்து பேசலாம். ப்ளீஸ் சிட் டவுன்.''

ந்த வீடு, முழுவதுமாகப் பாழடைந்துகிடந்தது. வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக  வாசற்புறத் திண்ணையின் மேல் மிகப்பெரிய பெட்டி ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட 40 அல்லது 45 வருடங்களுக்கும் முன்பாக செய்யப்பட்டிருக்கும்போல. அதன் பின்புறமாகக் கிடந்த பூனைக்குட்டி  ஒன்று, நம்மைக் கண்டதும் தன் தலையை உள்ளே இழுத்துக்கொள்கிறது. சுவற்றின் ஒரு ஓரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சிமிழ் விளக்கு, இன்னும் சில நிமிடங்களில் அணைந்துவிடும்படியாக மினுங்க ஆரம்பித்தது. ஒரேயொரு கடிகாரம், நடுப்பக்க சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் தலைகீழாகக் கிடக்கிறது. கண்கள் விரிய அவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே நாம் உள்ளே நுழைய எத்தனித்தபோது, மூன்றாம் பத்தியிலிருந்து வேகமாக வந்துவிழுகிறது ஒரு சொம்பு. திடுக்கிட்டுப்போய் நாம் சொம்பு வந்த திசையைப் பார்க்க,

சந்திராவும் அவர் அம்மா சீதாலெட்சுமியும்

“ஆச்சாரம்... ஆச்சாரம்... ஏண்டா பாவிப்பயலே இப்புடியா சொல்லாம கொள்ளாம வீட்டுக்குள்ள நுழையுவ. என்ன சாதியோ என்ன எழவோ. மொதல்ல வெளிய போடா. இது வைஷ்ணவா வாழ்ற வீடு” என்றபடியே குடுகுடுவென ஓடி வருகிறார் சந்திரா. புகை மூட்டமாக இருந்த மூன்றாம் பத்தியிலிருந்து இரண்டாம் பத்திக்கு சந்திரா வந்தபிறகுதான், நம்மால் அவரைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஒருவித கோபத்துடன் அவர் நம்மிடம் வந்துகொண்டிருக்கும்போதே, உள்ளே இருந்த சீதாலெட்சுமி பாட்டி, “இதோ பாருடியம்மா சந்திரா அவாள்லாம் உன் கண்ண பரிசோதிக்க வந்திருக்காடி. பேசாம அங்கேயே நில்லுடியம்மா” என்றதும் “பேசக்கூடாது பேசக்கூடாது, நீ பேசவே கூடாது“ என்கிறார் சந்திரா. “இல்லடிம்மா நீதானே கண்ணு சரியா தெரியலேண்ணே. அதான் பெருமாள் இவாள உன்கிட்ட அனுப்பியிருக்கான்டி” என்று மீண்டும் சீதாலெட்சுமி பாட்டி சொல்ல, “அப்படியா, பெருமாளே உங்களை இங்க அனுப்பியிருக்காரா? அப்டின்னா வாங்கோ உள்ள வந்து பேசலாம். ப்ளீஸ் சிட் டவுண். ஏம்மா வந்தவாளுக்கு ஏதாவது கொடுங்கோளேன். நீ என்ன சாப்பிடுறே. யூ வான்ட் சம் மில்க்'' என ஆங்கிலத்தில் கேட்க, திகைப்பில் வாயடைத்துப்போனோம். 

விழுப்புரத்துக்கு அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில்தான், நாம் சந்திரா பாட்டியையும் அவர் அம்மா சீதாலெட்சுமியையும் சந்தித்தோம். சந்திராவுக்கு 65 வயது இருக்கும். அவர் அம்மாவுக்கு 87 வயதுக்கும் மேல் இருக்கலாம். அந்த வீட்டுக்குள் அவர்கள் இருவரும் மட்டும்தான் தனியாக வாழ்கிறார்கள். அதிலும், சந்திரா மனநலம் பாதிக்கப்பட்டவர். 65 வயதான தன் மகளை இப்போதும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்பவர் சீதாலெட்சுமி பாட்டிதான்.

“எனக்குச் சொந்த ஊர் மெட்ராசுல இருக்குற பிராட்வேதான் தம்பி. கபாலீஸ்வரர் கோயில் பக்கத்துல இருந்த ஒரு பள்ளியில எட்டாவது வரை படிச்சேன். எங்க காலத்துல எல்லாம் பொண்ணுங்க படிக்குறதே பெரிய விஷயம். அதுலயும் எட்டாவது வரையிலும்னா கேட்கவே வேணாம். எனக்குத் தெரிஞ்சு வேற எந்தப் பொண்ணும் அப்போ என்ன மாதிரி படிக்கலை. ஏன்னா, என் அப்பா மிலிட்டரியில இருந்தவரு. மிலிட்டரிக்காரரு பொண்ணுன்னு எனக்குப் பெருமையும், கூடவே பாக்குறவங்களுக்கு என்மேல மரியாதையும் இருந்துச்சு. ஓரளவுக்கு உள்ளுர் நடப்புல இருந்து வெளியூர் நடப்புகள் வரைக்கும் தெரிய ஆரம்பிச்ச வயசு. அப்போதான் வீட்டுல உள்ள பெரியவாள் எல்லாரும் சேர்ந்து பேசி என்னை என் அம்மாவோட தம்பிக்கே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. 

சந்திரா

அவர் பேரு ஆறாவமுது ஐயங்கார். நல்ல வாட்டசாட்டமா அழகா இருப்பார். 15,16 வயசுலயே கல்யாணம் ஆகிட்டதால, கரு வயித்துலயே தங்கல. உடனே உடனே அபார்ஷன் ஆகிடுச்சு. அப்படியே கரு தங்கினாலும் பிறந்ததும் குழந்தை எனர்ஜி இல்லாம இறக்க ஆரம்பிச்சிடுச்சு. நாலு அஞ்சு குழந்தைங்க அப்படியே போனதுக்கு அப்பறம்தான் இவா பொறந்தா. அவரு, நானு எங்களுக்குன்னு ஒரு வாரிசுன்னு வாழ்க்கை ரொம்பவே சந்தோஷமா போய்க்கிட்டு இருந்துச்சு. இவா நடக்க ஆரம்பிச்சப்போதான் புத்தி சுவாதீனமில்லாத கொழந்தைனு தெரிய வந்துச்சு. அந்தச் சோகம் அவாளை ஏதோ பண்ணிட்டே இருந்துச்சு. கொஞ்ச நாள் தாக்குப் புடிச்சார். அப்பறம் பரலோகம் போயிட்டார். குடும்பச் சுமையையும் இவளைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பையும் அந்தப் பகவான் என்கிட்ட ஒப்படைச்சிட்டான். இப்போகூட பாருங்க, ஒரு டீ போடத் தெரியாது, சோறு ஆக்கத் தெரியாது” என்று சீதாலெட்சுமி பாட்டி சொல்ல, பக்கத்திலிருந்த சந்திரா பேசக்கூடாது... பேசக்கூடாது... நீ பேசவே கூடாது”... என்கிறார். “இந்த வார்த்தைய மட்டும் கத்து வெச்சிருக்கேடி. வந்துருக்கவங்ககிட்ட என்ன கொஞ்ச நேரம் பேச விடுறியா. அமைதியா இரு” என்றவரிடம் சந்திரா இவ்வளவு அழகா ஆங்கிலம் பேசுறாரே என்றதும், “ஆமா, அது மட்டும் நல்லா பேசுவா. நான் அடிக்கடி அவகிட்ட ஆங்கிலத்துல ஏதாவது சொல்றது உண்டு. அதை நல்லா புடிச்சிக்கிட்டா. இங்க வேற யாரு இருக்கா. நானும் அவளும் மட்டும்தானே. இப்படி ஏதாவது மாறி மாறி பேசிக்குவோம். அவ திடீர்னு என்னை அடிக்க வருவா. வெளியில ஓடிப்போயிடுவா. ஆனா, அதெல்லாம் இப்போ கொஞ்சம் அடங்கிடுச்சு. ரெண்டு பேருக்குமே நல்லா வயசாகிடுச்சு. ஊருல இருந்து எப்பவாச்சும் யாராவது வந்து பாத்துட்டு போவாங்க. மத்தபடி நான் இருக்குற வரை அவளை நல்லபடியா பாத்துக்குவேன். எனக்கு அப்பறம்தான் என்ன பண்றதுன்னு தெரியல” தாய்மையின் கண்கள் கலங்க ஆரம்பிக்கின்றன. 

சீதாலெட்சுமியின் வீடு

தன்னுடைய அத்தனை வயதிலும் தன் மகளைக் குழந்தையாய்ப் பாதுகாக்கும் அந்தத் தாயின் உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரைக் கையெடுத்து வணங்கிவிட்டு அங்கிருந்து நாம் கிளம்ப, சந்திரா திருதிருவென முழிக்க ஆரம்பித்துவிட்டார். “சார், ப்ளீஸ் எனக்கு எப்போ அப்பாயின்மென்ட் கொடுக்கப்போறீங்க. ட்ரீட்மென்ட் எங்கே. மெட்ராசுல வெச்சித்தானா? நான் எப்போ தயாரா இருக்கணும்னு சொல்லுங்க” என்று குழந்தை போல அடம்பிடித்தார். அவரை சீதாலெட்சுமி பாட்டி அணைத்தபடியே “அவாளுக்கு நிறைய வேலை இருக்கும்மா. சீக்கிரமே உன்னை அழைச்சிட்டுப் போறதுக்காக கார் எடுத்துட்டு வருவா. நீ உள்ள வந்து சாப்பிடு. அப்போதான் உன்னை அழைச்சிட்டுப் போவா” என்று பொய் சொல்லி திண்ணையில் அமர வைத்துவிட்டு, உள்ளே சென்று சிமிழ் விளக்கைத் தூண்டிவிடுகிறார். 

திண்ணையில் அமர்ந்திருக்கும் சந்திராவின் சிரிப்பு சிமிழ் விளக்கின் ஒளியில் பட்டு, பாழடைந்த அந்த வீடு பிரகாசிக்க ஆரம்பித்தது.


டிரெண்டிங் @ விகடன்