கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்த அரசுப் பள்ளி!

 

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே தனியார் பள்ளிகளில்தான் அடுத்த கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளுக்கு சீட் வாங்க கால் கடுக்க நடைபோடுவார்கள் பெற்றோர்கள். ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. இந்தப் பள்ளி, 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 2002-ம் ஆண்டு 5 மாணவர்கள் மட்டும் பயின்றதால் அப்பள்ளி மூடப்பட இருந்தது. ஆனால், அப்போது தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற விஜயலலிதா, இந்தப் பள்ளியை கடின முயற்சியால் மாற்றியதோடு மாணவர்களின் எண்ணிக்கையை மளமளவென்று கூட்டினார். இதனால், மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இப்போது 359 ஆக உள்ளது. இந்தப் பள்ளியில், கட்டடங்களில் டைல்ஸ், மின் விசிறி, ஆர்.ஓ வாட்டர், கணினி, ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், ஏ.சி வகுப்பறை, ஆங்கில வழிக்கல்வி என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில்,2018 -19 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 1-ம் தேதியே தொடங்கியது. கல்வியாண்டு தொடங்கும் முன்பே இந்தப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கையில் 1-ம் வகுப்பில் 63 மாணவ மாணவிகளும்,1-ம் வகுப்பு நீங்கலாக இதர வகுப்புகளில் 41 மாணவ மாணவிகளும் சேர்ந்து,104 மாணவர்கள் வரும் கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்து அதிசயிக்க வைத்திருக்கிறார்கள். நிகழாண்டில் 5-ம் வகுப்பு முடித்து 56 மாணவர்களும், இதர வகுப்புகளிலிருந்து 5 மாணவர்களும் என 61 மாணவ மாணவிகள் இந்தப் பள்ளியை விட்டுச் செல்கின்றனர். ஆனால், புதிதாக 104 மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் சேர்ந்துள்ளதால், பள்ளியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 400 தாண்டியுள்ளது.
 
இதுபற்றி பேசிய தலைமை ஆசிரியை விஜயலலிதா, "மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது. பள்ளி கட்டட இடவசதிகளுக்கு ஏற்ப மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 420-ஐ தாண்டாத வகையில் சேர்க்கை நடத்த இருக்கிறோம். ஆனால், போட்டி போட்டுக்கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்க முயல்வதால், எண்ணிக்கை அதைத் தாண்டும்போல் தெரிகிறது. இருந்தாலும், இடவசதி கருதி மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 420-ஐ தாண்டாத வகையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நான், சக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற்றோர்கள், ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து முயன்று இந்தப் பள்ளியைச் சிறந்த முறையில் மாற்றினோம். அதற்குக் கிடைத்த பரிசே, மாணவர்கள் சேர்க்கையில் கல்வியாண்டு தொடங்கும் முன்பே சதமடித்தது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!