'இந்தக் கொலை வேற மாதிரி!' - நள்ளிரவில் பத்து பேரை பதறவைத்த போன்கால்

 போன் மிரட்டல் 

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், ஒரே தொழிலைச் செய்துவரும் 10 பேருக்கு, நள்ளிரவில் போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் குடும்பத்துடன் குடியிருந்துவருகிறார். இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியில் இருந்தவருக்கு, சில நாள்களுக்கு முன்பு, நள்ளிரவில் போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது, பணத்தைத் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். பிறகு, தன்னுடைய செல்போனில் பதிவான அந்த உரையாடலுடன், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு காவல் நிலையத்துக்குச் சென்று,  நடந்த விவரத்தையும் ஆடியோவையும் போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்துள்ளனர். 

அந்த ஆடியோவில்,  

மிரட்டுபவர்: ''பணம் ரெடி பண்ணீட்டீயா?''

 கிழக்குக் கடற்கரைச் சாலையைச் சேர்ந்தவர்: ''யார் பேசுறது?''

மிரட்டுபவர்: ''நேத்து அவ்வளவு தெளிவா பேசியிருக்கேன். இப்ப வந்து யார் பேசுறதுன்னு கேட்கிற...'' 

 கிழக்குக் கடற்கரைச் சாலையைச் சேர்ந்தவர்: ''நான் ஏன் பணம் கொடுக்கணும்?''

மிரட்டுபவர்: ''நீ படித்தவன்... நேத்து நான் பேசினதை ரெக்கார்டுகூட பண்ணியிருக்கலாம்.''

 (சிறிது நேரம் அமைதிக்குப் பிறகு) 

மிரட்டுபவர்: ''உன் மனைவியைக் கொலை செய்ய முடியும். உன்னைக்கூட போட முடியும், உன் குழந்தையைப் போட முடியும். ப்ரூஃப் பண்ணி காட்டட்டுமா?''

  கிழக்குக் கடற்கரைச் சாலையைச் சேர்ந்தவர்: ''உங்களுக்கு என்ன வேணும்?''

 மிரட்டுபவர்:  ''பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்கிற கூட்டம் இருக்கும் வரை என்னை மாதிரி இருக்கிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பணத்துக்காகக் கொலை, கொள்ளையடிப்பவர்கள் கூட்டத்தினரிடம் நீ மாட்டுவதற்கு முன், என் கையில் நீ மாட்டியிருக்கிற.  உன்கிட்ட நான் என்ன கேட்டேன்... உன் மனைவிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் பணம் செலவானதா வைச்சுக்கோ... போலீஸ்கிட்ட போவேன்னா போ, என்னை நீ எதுவும் செய்ய முடியாது. என்னால, உன் வீட்டுல யார் யாரை போட முடியுமோ, அவர்களை ஈஸியாக போட முடியும். இப்பச் சொல்லு. நீ வேலைபார்க்கிற இடத்திலேயே வந்து உன்னைக் கொல்லுவேன். 
 பேப்பர்ல செய்தி வர்ற  மாதிரி வெட்டிக் கொலை, குத்திக் கொலை மாதிரி இல்ல... இது வேற மாதிரி டா...'' 
என்பதோடு ஆடியோ முடிவடைகிறது. 

  இந்த மிரட்டல் ஆடியோகுறித்து சென்னையில் உள்ள போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். ஆடியோவைக் கேட்ட அவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 

 போலீஸார் கூறுகையில், "கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள வி.வி.ஐ.பி-க்களை குறிவைத்து இந்த மிரட்டல் போன் அழைப்புகள் நள்ளிரவில் வந்துள்ளன. ஒரே ஸ்டைலில்தான் எல்லோரிடமும் மிரட்டல் கும்பல் பேசியுள்ளது. எங்களிடம் புகார் கொடுத்தவர், போனில் மிரட்டல் வந்ததும், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல்கொடுத்துள்ளார். உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினோம். அதன்பிறகுதான் அவர், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவருக்கு வந்த போன் நம்பர்குறித்த தகவலைச் சேகரித்துவருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் சிலர் போனில் மிரட்டப்பட்டனர்.  அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் போனில் மிரட்டியது தெரியவந்தது. அவர், மனநல காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக கிழக்குக் கடற்கரைச் சாலையில் மட்டும் ஒரே தொழில்செய்யும் 10 பேருக்கு மிரட்டல் போன்கால்கள் வந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. போனில் மிரட்டல் விடுத்த கும்பலை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!