வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (03/05/2018)

கடைசி தொடர்பு:16:10 (03/05/2018)

`யாருக்காக நடக்கிறது அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் கவுன்சலிங்?' - கிராமப்புற மாணவர்களுக்கு அடுத்த `செக்'

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் கலந்தாய்வு முறைக்கு எதிராகக் கொந்தளிக்கின்றனர் கல்வியாளர்கள். `மாணவர்கள் நலனை முன்னிறுத்தி ஆன்லைன் கலந்தாய்வு மென்பொருள் தயாரிக்கப்படவில்லை. இதில் குளறுபடிகள் நடக்கவே வாய்ப்பு அதிகம்' என்கின்றனர் கல்வியாளர்கள். 

`யாருக்காக நடக்கிறது அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் கவுன்சலிங்?' - கிராமப்புற மாணவர்களுக்கு அடுத்த `செக்'

அண்ணா பல்கலைக்கழகம்

ண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் கலந்தாய்வு முறைக்கு எதிராகக் கொந்தளிக்கின்றனர் கல்வியாளர்கள். `மாணவர்கள் நலனை முன்னிறுத்தி ஆன்லைன் கலந்தாய்வு மென்பொருள் தயாரிக்கப்படவில்லை. இதில் குளறுபடிகள் நடக்கவே வாய்ப்பு அதிகம்' என்கின்றனர் கல்வியாளர்கள். 

தமிழ்நாட்டில் 562 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அடங்கும். இந்தக் கல்லூரிகளில் உள்ள பி.இ, பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்பட உள்ளன. ஆண்டுதோறும் மாணவர்களைச் சென்னைக்கே வரவழைத்து, பொதுக் கலந்தாய்வை நடத்தி வந்தது அண்ணா பல்கலைக்கழகம். கடந்த ஆண்டு ஆன்லைன் பதிவு முறையைக் கொண்டு வந்தவர்கள், இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறை நடைமுறைப்படுத்த உள்ளனர். `ஜூலை முதல் வாரத்தில் இந்த ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது. 2018-19 கல்வியாண்டு சேர்க்கைக்காக இன்றிலிருந்து வரும் 30-ம் தேதி வரையில் ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம்' என அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ். `இந்தக் கலந்தாய்வின் மூலம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்' எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. `இதுகுறித்து வரும் 9-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம். 

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரிடம் பேசினோம். ``கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 என்ற இணையதளத்தை பயன்படுத்தி, அதில் கேட்கப்படும் அடிப்படை விவரங்களைக் குறிப்பிட்டு முதலில் தங்களுக்கென ஒரு யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆன்லைன் பதிவைத் தொடங்கி தேவையான விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு முன்பாக செல்போன் எண், இ-மெயில் முகவரி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பிளஸ் 2 ஹால் டிக்கெட் (பதிவு எண்ணுக்காக) 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியின் விவரங்கள், சாதிச் சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம், பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் விவரம் ஆகிய விவரங்களைத் தயாராக வைத்திருந்து பதிவு செய்ய வேண்டும் என்பதை விதியாக வைத்திருக்கிறார்கள். இணைய வசதி இல்லாத மாணவர்களுக்காக 42 இடங்களில் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இதெல்லாம் சரி...காலத்துக்கேற்ப மாறிக் கொள்வதை வரவேற்கிறோம். ஆனால், ஆன்லைன் கலந்தாய்வு முறையால் யாருக்கு நன்மை என்பதுதான் எங்களது பிரதான கேள்வி" என்றவர், 

ஆன்லைன் கலந்தாய்வு

``ஆன்லைன் கவுன்சலிங் மாணவர்களுக்கு ஏற்றவகையில் இல்லை. ஒருமுறை ஒரு கல்லூரியைத் தேர்வு செய்துவிட்டால், அவ்வளவுதான். அந்த மாணவருக்கு மாற்றுக் கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு ஓரிரு நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கின்றனர். மத்திய அரசின் ஐ.ஐ.டி ஜே.இ.இ கவுன்சலிங்கில்கூட ஒரு மாணவருக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. மருத்துவ கவுன்சலிங் நடப்பதற்கு முன்னதாகப் பொறியியல் கலந்தாய்வு நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பொறியியல் படிப்பைத் தேர்வு செய்த மாணவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துவிட்டது என்றால், அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவர் தேர்வு செய்த இடம் காலியாக இருக்கும். இவர்கள் கொடுக்கும் மூன்று நாள் அவகாசத்தில் மருத்துவ கவுன்சலிங் நடக்கப் போவதில்லை. அப்படியென்றால், அண்ணா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்ற மாணவரின் இடம் காலியாகிவிடும். இந்தத் தகவல், அடுத்தநிலையில் இருக்கும் மாணவருக்குத் தெரியப் போவதில்லை. இதற்கு முந்தைய கலந்தாயில் இதனைத் தெரிந்து கொள்ளும் வசதி இருந்தது. இவர்கள் உருவாக்கியுள்ள சாஃப்ட்வேரில் அதற்கு இடம் இல்லை. ரயிலில் டிக்கெட் பதிவு செய்யும்போதுகூட, மூன்றாவது ஏ.சி கோச்சிலிருந்து ஒருவர் இரண்டாவது ஏ.சி கோச்சில் இடம் காலியாக இருந்தால் மாறிக் கொள்ளலாம். அதற்கான வாய்ப்பை ஐ.ஆர்.சி.டி.சி உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. 

அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வின் மூலம் ஒரு மாணவர் எஸ்.எஸ்.என் கல்லூரியில் சேர்ந்துவிடுகிறார். அவருடைய மதிப்பெண்ணுக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலேயே இடம் காலியாக இருக்கிறது என்ற விவரம் தெரியப் போவதில்லை. எஸ்.எஸ்.என்னில் கல்லூரிக் கட்டணம் ஒன்றேகால் லட்ச ரூபாய். அதுவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் வெறும் 25 ஆயிரம் ரூபாய். உலகம் முழுக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் பிரபலம். இப்படியோர் இடம் காலியாகிவிட்டது என்ற உண்மை தெரியாமலேயே அந்த மாணவர் அதிகக் கட்டணம் செலுத்தி படித்துக் கொண்டிருப்பார். அந்தக் கோட்டாவில் காலியாகும் இடத்தை, யார் அபகரித்துக் கொள்ளப் போகிறார்கள். இதற்காக எவ்வளவு பணம் விளையாடும் என்பதெல்லாம் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஐ.ஐ.டிக்கு இணையாக ஆன்லைன் கவுன்சலிங் நடத்துகிறார்கள் என்றால், அந்த சாஃப்ட்வேரோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கட்டும். இவர்களுக்கு வசதியாக ஐ.ஐ.டி ஜே.இ.இ ஆன்லைன் கவுன்சலிங்கைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்வதற்கு நிர்வாகம் ஏன் தயங்குகிறது எனத் தெரியவில்லை. இதன்பின்னணியில் உயர்கல்வித்துறை அதிகாரிகளின் பின்னணி விசாரிக்கப்பட வேண்டும். துணைவேந்தருக்குத் தெரிந்துதான் இது நடக்கிறதா எனவும் தெரியவில்லை" என்றார் ஆதங்கத்துடன். 

மன்னர் ஜவஹர்அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹரிடம் பேசினோம். ``ஆன்லைன் கவுன்சலிங் முறையை முன்பே ஒருமுறை செயல்படுத்திப் பார்த்தோம். இதற்காக மூன்று இடங்களைத் தேர்வு செய்து நடத்தினோம். அது வெற்றியைக் கொடுக்கவில்லை. நமது கிராமப்புற மாணவர்களுக்குப் பழைய சிஸ்டம்தான் சிறந்தது. அவர்களே நேரடியாக வந்து தேர்வு செய்வதுதான் சரியானதாக இருக்கும்" என்றார். 

இதுகுறித்து, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜிடம் பேசினோம். ``மருத்துவக் கவுன்சலிங் தொடங்கிய பிறகுதான், பொறியியல் கவுன்சலிங்கைத் தொடங்க இருக்கிறது. மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இடம் கிடைத்தாலும், மருத்துவமா.. பொறியியலா.. என அவர்கள் முடிவு செய்துவிட்டு, ஏற்கெனவே வாங்கிய சீட்டை சரண்டர் செய்துவிடலாம். இது காலம்காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம். ஆன்லைன் கலந்தாய்விலும் இது தொடரும். ஒரு மாணவருக்கு மூன்று நாள் அவகாசம் ஏன்  கொடுக்கிறோம் என்பதையும் விளக்குகிறேன்.

ரேங்க் போட்டபிறகு கவுன்சலிங் பணிகள் தொடங்கும். ஐந்து சுற்றுகளாக மாணவர்களைப் பிரிக்கிறோம். மூன்று நாள் அவகாசத்தில் அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறோம். அதற்கேற்ற புக்லெட், வீடியோ காட்சிகள் ஆகியவற்றை வழங்க இருக்கிறோம். அந்த மூன்று நாள்களில் எவ்வளவு சாய்ஸ்களை வேண்டுமானாலும் அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். அந்த சாய்ஸை வரிசைப்படுத்திக் கொடுக்க வேண்டும். அதன்பிறகு கோட்டா படியும் ரைமண்ட் உத்திரியராஜ்ரேங்க் அடிப்படையிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த இடத்தை உறுதிப்படுத்த இரண்டு நாள் அவகாசம் கொடுக்கிறோம். இதில் எந்தவித பிரச்னையும் வரப் போவதில்லை. 

கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவது என்பது, இணைய வசதி இல்லாததை மையமாக வைத்துச் சொல்கின்றனர். இவர்களுக்காகத்தான் மாநிலம் முழுவதும் 42 இலவச இணைய மையங்களைத் தொடங்கியிருக்கிறோம். அங்கு அவர்களுக்கு வழிகாட்ட பேராசிரியர்கள் இருக்கிறார்கள். எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும் என அந்தப் பேராசிரியர்கள் வழிகாட்ட மாட்டார்கள். முழுக்க மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். முதல்நாள் ஆன்லைனில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், இலவச சேவை மையங்களைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்கிறார்கள். மாணவரின் மதிப்பெண்ணுக்கு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

சென்னைக்கு நேரடியாக வந்து பங்கேற்ற காலங்களில் மூன்று சாய்ஸ்களைக் கொடுத்து ஐந்து நிமிடத்தில் ஒரு மாணவனின் கவுன்சலிங்கை முடித்துவிடுவோம். இப்போது அப்படியல்ல. மூன்று நாள் அவகாசம் கொடுத்து, ஏராளமான சாய்ஸ்களைக் கொடுக்கிறோம். இதில் கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற வேறுபாடுகளைப் பார்க்க வேண்டியதில்லை. அதேபோல், சாஃப்ட்வேர் டெவலப் பண்ணும்போது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் முழுமையாக ஆய்வு செய்தோம். நம்முடைய மாணவர்களுக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதை முடிவு செய்து, இந்த மென்பொருளை வடிவமைத்திருக்கிறோம். எனவே, ஆன்லைன் கலந்தாய்வு என்பது முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவிருக்கிறது. இதில் எந்தவித சந்தேகமும் எழுப்ப வேண்டிய அவசியமில்லை" என்றார் உறுதியாக. 
 


டிரெண்டிங் @ விகடன்