வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/05/2018)

கடைசி தொடர்பு:21:51 (03/05/2018)

`எடப்பாடி பழனிசாமி பேருக்கு அர்ச்சனை' விளம்பரத்தை நாங்க இயக்கவில்லை! மறுக்கும் ராம்கி - நிரோஷா

எடப்பாடி பழனிச்சாமி பேருக்கு அரச்ச்னை விளம்பரம் குறித்து நிரோஷா

பொதுமக்கள் தரப்பிலிருந்து எக்கச்சக்க அர்ச்சனைகள் விழுந்ததன் எதிரொலியாக, எடப்பாடி பழனிசாமி பேருக்கு அர்ச்சனை செய்யச் சொன்ன அந்த விளம்பரத்தை தியேட்டர்களிலிருந்து தூக்கியிருக்கிறார்கள். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'அந்த விளம்பரம் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதன் தொடர்ச்சியாக, தியேட்டர்களில் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது' என்றார். 'அரசின் விளம்பரம் ஒன்று இந்த அளவுக்கு தாறுமாறாகக் கேலி, கிண்டல் செய்யப்படுவது இதுவே முதன்முறை' என்கிறார்கள் அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சீனியர் அதிகாரிகள்.

நிரோஷா

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதைச் சாதனையாகப் பதிவு செய்ய நினைத்து, கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிப்போன அந்த விளம்பரத்தில் நடித்திருந்த சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மியிடம் நாம் ஏற்கெனவே பேசியிருந்தோம். 'நடிகர் ராம்கி இயக்கிய அந்த விளம்பரப் படத்தில் நடித்தபோது, முதல்வர் குறித்த புகழ்ச்சி வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டபோது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது' என அப்போது நம்மிடம் சொல்லியிருந்தார் மகாலக்ஷ்மி. தற்போது அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், விளம்பரத்தை இயக்கியதாகச் சொல்லப்படும் ராம்கி தரப்பில் பேச முற்பட்டோம்.

நம்மிடம் பேசிய நிரோஷா, 'ஏங்க நாட்டுல எவ்வளவோ நடக்குது. அதையெல்லாம் கவனிக்கறதை விட்டுட்டு, இந்த ஒரு விளம்பரத்தைப் பத்தி ஏன் இவ்ளோ பேசணும்? கேலி, கிண்டல் பண்றதுக்கு வகை தொகை இல்லாமப் போச்சு. அந்த அர்ச்சனை விளம்பரத்துக்கும் ராம்கிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைங்க. அவர் அந்த விளம்பரத்தை டைரக்ட் பண்ணலை, போதுமா' எனக் கடுகடுத்தார்.

எது உண்மையோ, ஆனால் விளம்பரம் நிறுத்தப்பட்டதில் உண்மையிலேயே வருத்தத்தில் இருப்பவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்தான்.