வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (03/05/2018)

கடைசி தொடர்பு:17:20 (03/05/2018)

காவல் நிலையத்தில் அரசு ஊழியர் மரணம்! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

காவல் நிலையத்தில் அரசு ஊழியர் மரணம்! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

சூணாம்பேடு காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது உடலை வாங்க மறுத்து அவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு. இவர் அச்சிறுப்பாக்கம் உதவித் தொடக்க கல்வி அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்த் என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து சூணாம்பேடு காவல் நிலையத்தில் சிற்றரசு தன்னை கொலை செய்ய முயன்றதாக ஆனந்த் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, அரசு ஊழியரான சிற்றரசை சூணாம்பேடு காவல்துறையினர் விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் லாக்கப் அறையில் சிற்றரசு தூக்குப்போட்டுக் கொண்டதாகவும், உயிருக்குப் போராடிய நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கிறார்கள். சிற்றரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் சூணாம்பேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டார்கள். காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்துசென்றனர். இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு திறண்ட உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் ஆய்வாளர்மீது நடடிவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுத்த பின்னரே சிற்றரசு உடலை வாங்குவோம் எனக் கலைந்து சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க